வங்கதேசத்துக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் விளையாட மாட்டார்.
அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக 14 பேர் கொண்ட இந்திய அணி விராட் கோலி தலைமையில் டாக்கா சென்றது.
கே.எல்.ராகுலுக்கு டெங்கு காய்ச்சல் என்று கூறப்படுகிறது. காய்ச்சலுடன் உடற்தகுதி சோதனைக்கு வந்த ராகுலை மருத்துவர் உடற்தகுதி இல்லை என்று நிராகரித்தார்.
இதனையடுத்து முரளி விஜய், ஷிகர் தவண் ஜோடியே தொடக்கத்தில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராகுலுக்குப் பதிலாக மாற்று வீரரை அனுப்பவில்லை என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது சர்ச்சையில் சிக்கிய ஷிகர் தவன் சிட்னி டெஸ்ட்டில் நீக்கப்பட்டார், தற்போது அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடிய் தவண் 412 ரன்களை 51.50 என்ற சராசரியின் கீழ் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தனது அறிமுக போட்டியில் மோசமான ஷாட்டுக்கு அவுட் ஆன ராகுல் 3 மற்றும் 1 ரன்னையே எடுத்தார். ஆனால் சிட்னி டெஸ்ட்டில் சதமடித்து நிரந்தர தொடக்க வீரருக்கான இடம் பிடித்தார். இந்நிலையில் காய்ச்சல் காரணமாக அவர் வங்கதேசத்துக்கு செல்ல முடியாது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா சென்று வந்த பிறகு ரஞ்சி கிரிக்கெட் தொடரில் ராகுல், 838 ரன்களை 93.11 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இதில் உ.பி. அணிக்கு எதிராக முச்சதமும் தமிழக அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் 188 ரன்களையும் குவித்தார் ராகுல்.