கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் அக்னிப் பரீட்சை நடத்துகின்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முந்தைய ஆண்டுகளில் இருவரும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அவையனைத்திலும் நடாலே வெற்றி கண்டுள்ளார். பிரெஞ்சு ஓபனில் 2005 முதல் விளையாடி வரும் நடால், 2009 நீங்கலாக மற்ற 9 முறையும் சாம்பியனாகியுள்ளார்.
களிமண் ஆடுகளமான ரோலன்ட் கேரஸில் (பிரெஞ்சு ஓபன் நடை பெறும் இடம்) முடிசூடா மன்னனாக திகழும் நடால், மோசமான பார்ம் காரணமாக பிரெஞ்சு ஓபனுக்கு முந்தைய போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்தார். அதனால் தரவரிசையில் பின்னடைவை சந்தித்த நடாலுக்கு பிரெஞ்சு ஓபன் போட்டித் தரவரிசையில் 6-வது இடமே கிடைத்தது. இந்த பிரெஞ்சு ஓபனில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் நடால் சிறப்பாக ஆடி வந்திருந்தாலும், ஜோகோவிச்சுடனான இன்றைய போட்டி அவருக்கு அக்னிப் பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது.
அதற்கு காரணம் ஜோகோவிச்சின் சமீபத்திய பார்மும், களிமண் ஆடுகளத்தில் அவருடைய சமீபத்திய வெற்றிகளும்தான். இந்த சீசனில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் முதல் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதோடு மட்டுமின்றி, இண்டியன் வெல்ஸ், மியாமி, மான்டி கார்லோ, ரோம் போன்ற ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் சாம்பியனாகினர். இந்த சீசனில் தொடர்ச்சியாக 26 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள ஜோகோவிச், நடாலுக்கு பெரும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய மூன்றிலும் வாகை சூடிவிட்ட ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனில் மட்டும் நடாலின் ஆதிக்கம் காரணமாக இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை. அதனால் இந்த முறை பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் வாகை சூடிய 8-வது வீரர் என்ற பெருமையைப் பெறுவதில் ஜோகோவிச் தீவிரமாக இருக்கிறார்.
பிரெஞ்சு ஓபனில் இதற்கு முன்னர் 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய ஜோகோவிச், அதில் நடாலிடம் தோற்றார். அதனால் இந்த முறை நடாலை வீழ்த்தி முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க ஜோகோவிச் முயற்சிப்பார். ஆனாலும் பிரெஞ்சு ஓபனில் எப்போதுமே விடாப்பிடியாக போராடும் நடாலை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல.
எனினும் இந்த ஆட்டத்தில் வெல்பவர்களே இந்த முறை பிரெஞ்சு ஓபனில் சாம்பியனாக அதிக வாய்ப்புள்ளது. அதனால்
இந்த ஆட்டம் டென்னிஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரெஞ்சு ஓபன், நடாலுக்கு கவுரவப் பிரச்சினை என்றால், ஜோகோவிச்சுக்கோ அதில் வெல்ல வேண்டும் என்பது நீண்டகால கனவு. எனவே இந்த காலிறுதி ஆட்டம் அனல் பறக்கும் அக்னிப் பரீட்சையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது கவுரவமா அல்லது கனவா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அரையிறுதியில் அனா இவானோவிச்
நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில் செர்பியாவின் அனா இவானோவிச் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் இவானோவிச், கடந்த 2008-க்குப் பிறகு இப்போதுதான் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். 2008 பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவரான இவானோவிச், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 5-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். இவானோவிச் தனது அரையிறுதியில் செக்.குடியரசின் லூஸி சஃபரோவாவை சந்திக்கவுள்ளார். சஃபரோவா தனது காலிறுதியில் 7-6 (3), 6-3 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவை தோற்கடித்தார்.