செயின்ட் ஜோசப் 26-வது மாவட்டங்கள் இடையிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் தொடங்கி வைத்தார்.
ஆடவர் பிரிவில் 29 மாவட்ட அணிகளும், மகளிர் பிரிவில் 21 மாவட்ட அணிகளும் பங்கேற்றுள்ளன. மொத்தமுள்ள அணிகள் ஆடவர் பிரிவில் 9 பிரிவுகளாகவும், மகளிர் பிரிவில் 7 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆடவர் பிரிவில் 33 ஆட்டங்களும், மகளிர் பிரிவில் 21 ஆட்டங்களும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
முதல் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு போட்டியில் சென்னை அணி 66-31 என்ற கணக்கில் தேனியையும், கரூர் 38-26 என்ற கணக்கில் நாமக்கல் அணியையும், திருவள்ளூர் 48-12 என்ற கணக்கில் தருமபுரியையும், திண்டுக்கல் 50-49 என்ற கணக்கில் மதுரையையும் தோற்கடித்தன.
சேலம் 50-38 என்ற கணக்கில் வேலூர் அணியையும், புதுக்கோட்டை 45-42 என்ற கணக்கில் நாகப்பட்டினத்தையும், திருவண்ணாமலை 34-5 என்ற கணiக்கில் திருவாரூரையும், தூத்துக்குடி 52-46 என்ற கணக்கில் கடலூரையும், கோவை 58-34 என்ற கணக்கில் திருப்பூரையும் தோற்கடித்தன.
திருநெல்வேலி அணி 43-30 என்ற கணக்கில் காஞ்சிபுரத்தையும், தேனி 48-37 என்ற கணக்கில் ராமநாதபுரத்தையும், திருவள்ளூர் 47-28 என்ற கணக்கில் விருதுநகரையும், சிவகங்கை 36-34 என்ற கணக்கில் கன்னியாகுமரியையும், திருநெல்வேலி 56-52 என்ற கணக்கில் தூத்துக்குடி அணியையும் வீழ்த்தின.
மகளிர் பிரிவில் சென்னை 62-17 என்ற கணக்கில் நாகப்பட்டினத்தையும், கோவை 53-28 என்ற கணக்கில் விருதுநகரையும், திருநெல்வேலி 31-12 என்ற கணக்கில் கரூரையும், சிவகங்கை 18-10 என்ற கணக்கில் திருவண்ணாமலையையும், சேலம் 63-32 என்ற கணக்கில் தருமபுரியையும், கடலூர் 25-19 என்ற கணக்கில் திருவாரூரையும், காஞ்சிபுரம் 42-16 என்ற கணக்கில் தருமபுரியையும், விருதுநகர் 29-10 என்ற கணக்கில் திருப்பூரையும் தோற்கடித்தன.