விளையாட்டு

லூயிஸுக்கு அறுவை சிகிச்சை

செய்திப்பிரிவு

உருகுவே கால்பந்து அணியின் முன்னணி வீரரான லூயிஸ் சுரேஜுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், சுரேஜுக்கு காயம் ஏற்பட்டிருப்பது உருகுவே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

அவர் கடந்த புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது முழங்காலில் திடீரென வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் முழங்காலில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக உருகுவே அணியோ, அந்நாட்டு கால்பந்து சம்மேளனமோ உடனடியாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் சுரேஜுக்கு காயம் ஏற்பட்டிருப்பதை அவருடைய சகோதரர் பாவ்லோ சுரேஜ் உறுதி செய்துள்ளார்.

அவர் மீண்டும் களமிறங்க 4 முதல் 6 வாரங்கள் வரை ஆகலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வரும் சுரேஜ், இந்த சீசனில் மட்டும் 31 கோல்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT