விளையாட்டு

குறைந்தது 5 ஆண்டுகளுக்கு இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதை விரும்புகிறேன்: விராட் கோலி

செய்திப்பிரிவு

உலகின் தலைசிறந்த அணியாக திகழ இந்திய கிரிக்கெட் அணியிடத்தில் திறமை இருக்கிறது என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் மன்த்லிக்காக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

"குறைந்தது 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் உலகில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நான் வலுவாக விரும்புகிறேன். நம்மிடம் திறமை நிறைய இருக்கிறது. இந்தத் திறமையை ஒருங்கிணைத்து எப்படி சிறப்பாக மேலாண்மை செய்வது என்பதைப் பொறுத்து இந்திய அணி ஆதிக்கம் செய்வது அமையும்.

நான் அணி வீரர்களிடத்தில் வலுவான பிணைப்பையும் நட்புறுதியையும் ஏற்படுத்த விரும்புகிறேன். ஆண்டில் 250 முதல் 280 நாட்கள் வரை நாங்கள் சேர்ந்தே இருக்கிறோம். எனவே வெளியிலிருந்து பார்ப்பதற்கு அடுத்த 10 ஆண்டுகளில் இந்த அணி உண்மையில் ஒற்றுமையான ஒரு அணி என்று அனைவருக்கும் உணர்த்தும் ஒரு சூழலை ஏற்படுத்த விரும்புகிறேன்.

இதில் ஒருவரும் தங்களுக்காக விளையாடுவதில்லை. அனைவரும் அனைவருக்குமாக விளையாடுகிறோம். இதுதான் என்னுடைய தீர்க்கமான பார்வை.

எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றிக்காக விளையாட வேண்டும், கடைசியில் டிராவுக்காக போராட வேண்டியிருந்தாலும் சரி, வெற்றியை நோக்கிச் செல்வது அவசியம். இந்த வகையான ஒரு கிரிக்கெட் ஆட்டத்தையே நாங்கள் விரும்புகிறோம்.

வீரர்களை எந்த வித ஐயத்திலிருந்தும் விடுவித்து அவர்கள் சுதந்திரமாக விளையாடுவதை நான் ஏற்படுத்த விரும்புகிறேன்.

களத்தில் ஆஸ்திரேலிய அணியினரின் செயல்பாடுகளைக் கவனிக்கும் போது, இவர்களை வீழ்த்த நாம் மிகச்சிறப்பாக ஆட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையை இந்திய அணி அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை வீழ்த்துவதை ஒரு சவாலாக எதிரணியினர் கருத வேண்டும். இது ஒரு மனநிலைதான்.

ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக அணி மேலாளர் அறையில் வீரர்களிடத்தில் நான் பேசும் போது, எந்த வீரராவது ஆஸ்திரேலியாவில் அவர் 2 சதங்கள் எடுப்பதற்காகவே அங்கு செல்கிறார் என்றோ, அல்லது 5 விக்கெட்டுகளை வீழ்த்த நான் செல்கிறேன் என்று பவுலர்களோ நினைத்தால் அவர்கள் வெளிப்படையாக அதனை தெரிவிப்பதோடு அந்த மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினேன்.

உங்களிடம் திறமை இருந்தால் போட்டியில் வெற்றி அல்லது தோல்வி அவ்வளவுதான். டிரா செய்வது என்பது கடைநிலைத் தஞ்சமாக இருக்க வேண்டும். ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்காக தோற்கும் ரிஸ்க் எடுப்பது பற்றி எனக்கு கவலையில்லை. நாம் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்று கூறினேன்.

ஆஸ்திரேலியா தொடரின் போது நான் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என்று நினைக்கவில்லை. தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த சிலபல பதற்றமான நிலைகளுக்குப் பிறகு அமைதி திரும்பிய போது, நான் எனது அறைக்குச் சென்றேன், அனுஷ்கா சர்மாவிடம் இது பற்றி தெரிவித்தேன். அவருக்கு ஒரு குழப்பமாகவே இருந்தது. தோனி ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்பது போன்ற கேள்வி அவரிடத்தில் இருந்தது.

அதன் பிறகு நிரந்தரமாகவே நான் கேப்டன் என்றவுடன் சற்று உடைந்து போனேன், ஏனெனில் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. 26 வயதில் நான் இந்திய அணியின் கேப்டனா? நேர்மையாகக் கூற வேண்டுமெனில் நான் இதனை நினைத்துக் கூட பார்க்கவில்லை” இவ்வாறு கூறினார் விராட் கோலி.

SCROLL FOR NEXT