பவுன்சரில் காயமேற்பட்டதால் கண்பார்வை பாதிப்படைந்து 27 வயதில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கீஸ்வெட்டர் ஓய்வு அறிவித்தார்.
முன்னாள் இங்கிலாந்து அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர் கிரெய்க் கீஸ்வெட்டர் கடந்த ஆண்டு கவுண்டி போட்டி ஒன்றில் பவுன்சரில் கண்களில் காயமடைந்தார். இதிலிருந்து அவரால் சரியாக மீள முடியவில்லை. இதனால் 27 வயதில் ஓய்வு அறிவித்தார் கீஸ்வெட்டர்.
இங்கிலாந்து அணிக்காக இவர் தொடக்க வீரராக களமிறங்கியதுடன், விக்கெட் கீப்பராகவும் செயலாற்றியுள்ளார்.
இதனையடுத்து அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான சோமர்செட் அணிக்கு விளையாடிய கீஸ்வெட்டர், நார்த்தாம்டன் ஷயர் அணிக்கு எதிராக 4 நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடினார். [>பயங்கர பவுன்சரில் முகம் பெயர்ந்த இங்கிலாந்து பேட்ஸ்மென் கீஸ்வெட்டர்]
அப்போது 14 ரன்களில் ஆடிவந்த கீஸ்வெட்டர், இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.ஜே.வில்லே என்பவரது பயங்கர பவுன்சர் ஒன்று ஹெல்மெட் தடுப்புக் கம்பிகளை உடைத்துக் கொண்டு அவரது வலது கண் மற்றும் மூக்குப் பகுதியை தாக்கியது. அன்று அவர் ரத்தம் சொட்டச்சொட்ட மைதானத்தில் சரிந்தார்.
அதன் பிறகு இவர் தீவிரமாக சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்நிலையில் கடந்த செப்டம்பரில் மீண்டும் இவர் கிரிக்கெட்டுக்குத் திரும்பினார். ஆனால், கண்பார்வை கிரிக்கெட் ஆட போதுமானதல்ல என்பது தெரியவந்தது.
இப்போது அவர் தான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கும் போது, “கிரிக்கெட்டிலிருந்து விலகி பிறகு வரலாம் என்று முயற்சித்தேன், வாய்ப்பும் எனக்கு அளிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் கிரிக்கெட் ஆடுவது முடியாது என்பதை உணர்ந்தேன். எனவே ஓய்வு பெறுவதே நல்லது என்று முடிவெடுத்து விட்டேன்” என்று சோமர்செட் இணையதளத்தில் அவர் கூறியுள்ளார்.
46 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 1054 ரன்களை எடுத்துள்ள கீஸ்வெட்டரின் அதிகபட்ச ஸ்கோர் 107 ரன்கள். ஒரு சதம், 5 அரைசதங்கள். விக்கெட் கீப்பராக 53 கேட்ச்கள் 12 ஸ்டம்பிங்குகள். ஒருநாள் போட்டிகளில் 90 ரன்கள் பக்கம் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். டி20 கிரிக்கெட்டில் 111 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.