ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு அஜிங்கிய ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டதையடுத்து அவருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மும்பையிலிருந்து வந்த சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் கேப்டனாக 2000-ம் ஆண்டு வரை இருந்தார். அதன் பிறகு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு மும்பை வீரரான அஜிங்கிய ரஹானே தற்போது இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “அஜிங்கியாவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் அர்ப்பணிப்புள்ள கடின உழைப்பாளி. அவரது கடமை உணர்வு மற்றும் அர்ப்பணிப்புத் தன்மை என்னை மிகவும் கவர்ந்தது.
சிறப்பானவற்றை நமக்காகக் கொடுத்து நாம் அவரைப்பற்றி பெருமை கொள்ள காரணமாக இருப்பார் என்று நம்புகிறேன். அவருக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்” என்றார்.
சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக கடைசி 2 போட்டிகளில் தோனி, ரஹானேயை உட்கார வைத்தார். அதற்கு தோனி கூறிய காரணம், மந்தமான பிட்ச்களில் அவரால் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய முடியவில்லை என்பதே.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய அணி ஹராரேயில். ஜூலை 10, 12 மற்றும் 14-ம் தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளிலும் இதன் பிறகு ஜூலை 17 மற்றும் 19-ம் தேதி இரண்டு டி20 போட்டிகளிலும் விளையாடுகின்றன.