விளையாட்டு

எப்போதும் கற்றுக்கொண்டேயிருக்கிறோம் என்ற மனநிலையுடன் இனி ஆட முடியாது: விராட் கோலி

இரா.முத்துக்குமார்

இன்னும் கற்றுக்கொண்டேயிருக்கிறோம் என்ற மனநிலையுடன் டெஸ்ட் போட்டிகளில் ஆடமுடியாது, இனி வெற்றிபெறவே ஆட வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

வங்கதேசத் தொடருக்குச் செல்வதற்கு முன்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களை ரவிசாஸ்திரியும், கேப்டன் விராட் கோலியும் சந்தித்தனர்.

அப்போது விராட் கோலி கூறியதாவது: "நாங்கள் நிறைய கற்றுக் கொண்டுள்ளோம், எனவே இனியும் நாங்கள் கற்றுக் கொண்டேயிருக்கிறோம் என்ற மனநிலையுடன் டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாது. இதுவே சரியான நேரம், நிறைய கற்றுக் கொண்டு விட்டோம், இனி திறன்களை எப்படி செயல்படுத்தினால் முடிவுகள் நமக்கு வெற்றிகரமாக அமையும் என்றும் டெஸ்ட் போட்டிகளை வெல்வதிலும் கவனம் செலுத்துவது அவசியம். எப்போதுமே கற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற மனநிலையில் இனி ஆடமுடியாது.

இப்போது நாம் நிறைய அனுபவம் பெற்றுள்ளோம், எனவே உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக எந்த வகையில் திறமையை வெளிப்படுத்தினால் அவர்களை வெல்ல முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இது ஒரு மனநிலைதான். ஒரு அணியாக திரண்டு விளையாடினால் எதுவும் சாத்தியமே.

ஒவ்வொரு டெஸ்ட் முடிந்தவுடன் நாங்கள் அந்த டெஸ்ட் போட்டியிலிருந்து கற்றுக்கொண்டோம் என்ற மனநிலை இனி தேவையில்லை. இனி வெற்றி பெறுவதில்தான் கவனம் இருக்க வேண்டும்.

இலக்குகளை எட்டுவதற்கான லட்சியங்கள், திட்டங்கள் எங்களிடம் உள்ளன. வங்கதேசத் தொடரிலிருந்து இந்த வகையிலேயே சிந்திப்போம்" என்றார்.

தோனிக்கும், கோலிக்கும் உள்ள வித்தியாசம் இதில் தெரிகிறது. தோனி எப்போதும் ஆட்டத்தின் ‘முடிவுகளை’ விட ‘வழிமுறைகளே’ முக்கியம் என்பார். நிறைய முறை தோனி ‘புரோசஸ்’ என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஆனால் விராட் கோலி, இனி முடிவுகள்தான் முக்கியம், எப்போதும் கற்றுக் கொண்டேயிருக்கிறோம் என்ற மனநிலையில் ஆட முடியாது என்கிறார்.

SCROLL FOR NEXT