விளையாட்டு

டிவில்லியர்ஸ் சாதனையை குறிவைக்கும் வங்கதேச பேட்ஸ்மென் மொமினுல் ஹக்

ஐஏஎன்எஸ்

புதன்கிழமை இந்தியா-வங்கதேசம் இடையே ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஃபாதுல்லாவில் தொடங்குவதை அடுத்து வங்கதேச பேட்ஸ்மென் மொமினுல் ஹக், டிவில்லியர்ஸ் சாதனை ஒன்றை குறிவைத்துள்ளார்.

12 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து டிவில்லியர்ஸ் அரைசதம் அடித்து ஒரு சாதனை புரிந்துள்ளார். டிவில்லியர்ஸ் இதனை நவம்பர் 2012 முதல் பிப்ரவரி 2014 வரை நடைபெற்ற 12 தொடர் டெஸ்ட் போட்டிகளில் அரைசதங்கள் எடுத்துள்ளார். வங்கதேசத்தின் மொமினுல் ஹக் இன்னும் ஒரு அரைசதம் எடுத்தால் டிவில்லியர்ஸ் சாதனையை சமன் செய்வார்.

வங்கதேச அணியின் இடது கை பேட்ஸ்மென் மொமினுல் ஹக் (வயது 23) அந்த சாதனையை சமன் செய்வாரா என்ற ஆவல் வங்கதேச அணியினரிடத்தில் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 2013-இல் நியூஸிலாந்துக்கு எதிராக மொமினுல் ஹக், சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் சதம் கண்டார். கடந்த மாதம் மிர்பூரில் பாகிஸ்தானுக்கு எதிராக இவர் தன் கடைசி டெஸ்ட் போட்டியில் 13 மற்றும் 68 ரன்களை எடுத்துள்ளார்.

இவர் இன்னொரு அரைசதம் கண்டால் 12 தொடர் டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் காணும் 2-வது வீரர் என்ற வகையில் டிவில்லியர்ஸ் சாதனையை சமன் செய்வார்.

இது பற்றி அவரிடம் பேட்டி கண்டவர் கேட்ட போது, “நீங்கள்தான் இந்தச் சாதனையை நினைவுபடுத்தினீர்கள். ஆனால் நான் அதனை மறந்து விட்டேன். நான் அதைப்பற்றி யோசிக்கவில்லை. அடுத்த முறை கூட இந்த சாதனையை நான் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.

நான் டிவில்லியர்ஸ் அருகில் கூட செல்ல முடியாது. அவர் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் கிங் ஆகத் திகழ்பவர். அவருடன் போய் நான் போட்டியிடமுடியுமா? நான் என்ன இலக்கு எனக்கு நிர்ணயித்துள்ளேனோ அதனை அடைய முயற்சி செய்வேன்” என்று தன்னடக்கத்துடன் பதில் அளித்தார் மொமினுல் ஹக்.

இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள மொமினுல், 1380 ரன்களை 60 ரன்கள் என்ற சராசரியில் எடுத்துள்ளார். 4 சதங்கள் 9 அரைசதங்கள். பகுதி நேர இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் செயல்படுகிறார்.

SCROLL FOR NEXT