இந்தியாவின் உண்மையான முதல் வேகப்பந்து விச்சாளர் உமேஷ் யாதவ்தான் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் அச்சுறுத்தல் வேகப்பந்து விச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராபர்ட்ஸ் கூறும்போது, "உமேஷ் யாதவ் என்னை மிகவும் கவர்கிறார். இந்தியாவின் முதல் உண்மையான வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்தான். இவருக்கு முன்பாக இந்தியாவில் உண்மையான வேகம் வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததாக நான் கருதவில்லை.
மொகமது ஷமியும் நன்றாக வீசுகிறார். ஆனால் இவர்கள் இருவரும் இன்னும் கூடுதல் ஆக்ரோஷம் காட்ட வேண்டும். ஆக்ரோஷம் என்றால் தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளக்கூடாது.
ஜவகல் ஸ்ரீநாத் கூட 'துரிதகதி'யில் வீசுபவர்தான், ஆனால் அவர் காலத்தில் வீசிய மற்ற வீச்சாளர்களை ஒப்பிடும் போது இவர் வேகம் குறைவுதான்.
துரிதகதியில் வீசுபவருக்கும் வேகமாக வீசுபவருக்கும் இடையே நான் வேறுபடுத்த விரும்புகிறேன். கபில்தேவ் ஒரு ஸ்விங் பவுலர். அவர் துரிதகதி பவுலர் அல்ல. இந்தியாவின் முதல் துரித கதி வீச்சாளர் என்று நான் பார்த்தது ஸ்ரீநாத்தைதான். ஆனால் சீராக மணிக்கு 90 மைல்கள் வேகத்தில் வீசும் உமேஷ் யாதவ் போன்ற வேகப்பந்து வீச்சாளர் அல்ல ஸ்ரீநாத்” என்று தரம்பிரித்து ஆராய்ந்துள்ளார் ராபர்ட்ஸ்.
தற்போதைய அனாயாச அதிரடி வீரர்களுக்கு எதிராக எப்படி பந்து வீசியிருப்பார் ராபர்ட்ஸ் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது, “இப்போது மிகவும் கனமான பேட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பின்னால் சென்று ஹூக் ஷாட்களை ஆடச் செய்வேன். ஷார்ட் பிட்ச் பந்துகளை திறம்பட அவர்களுக்கு எதிராக பயன்படுத்துவேன். மேலும் எடை கூடுதலான மட்டையை வைத்துக்கொண்டு வேகமான ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு உடனடியாக பின்னால் சென்று ஹூக் ஆட நேரம் இருக்காது.
ஆனால் இந்தக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களும் பவுன்சர் வீசுவதை தவிர்த்து லெந்த்தில் வீசுவதில் கவனம் செலுத்துகின்றனர்.
அதேபோல் மாற்றுப் பந்துகளை வீச வேகப்பந்து வீச்சாளர்கள் சற்றே மெதுவாக வரும் ஸ்லோயர் பந்துகளை வீச முடிவெடுக்கின்றனர். நான் என்ன கூறுகிறேன் என்றால் மணிக்கு 88-90 கிமீ வேகம் வீசும் ஒரு பவுலர் ஏன் மாற்றுப்பந்தை 95 கிமீ வேகத்தில் வீசக்கூடாது? திடீரென வேகத்தைக் கூட்டுவதும் மாற்றுப்பந்துதான்” இவ்வாறு கூறியுள்ளார் ஆன்டி ராபர்ட்ஸ்.