மே.இ.தீவுகளுக்கு எதிராக டொமினிகாவில நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் ஆடம் வோஜஸ் சதத்துடன் ஆஸ்திரேலியாவின் கை ஒங்கியுள்ளது.
மே.இ.தீவுகளின் தேவேந்திர பிஷூ 80 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை கதிகலங்கச் செய்தார். ஆனால் மற்ற வீச்சாளர்கள் ஒருவரும் சோபிக்கவில்லை, ஆட்டத்தில் தீவிரம் இல்லை, முனைப்பும் இல்லை.
ஆடம் வோஜஸ் 35-வது வயதில் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி சதம் அடித்ததன் மூலம் அதிக வயதில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் கண்ட வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
பிராட் ஹேடின் அபாரமான பிஷூ லெக் ஸ்பின்னுக்கு பவுல்டு ஆகி வெளியேறும்போது ஆஸ்திரேலியா 126/6 என்று இருந்தது. ஆனால் அதன் பிறகு ஆடம் வோஜஸ் 130 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, கடைசி விக்கெட்டுக்காக வோஜஸ்-ஹேசில்வுட் ஜோடி 97 ரன்களைச் சேர்க்க 318 ரன்கள் எடுத்தது.
அதாவது கடைசி 4 விக்கெட்டுகள் இணைந்து வோஜஸ் சதத்துடன் ஆஸ்திரேலியா அணி 192 ரன்களை குவிக்க மே.இ.தீவுகள் அனுமதித்துள்ளது.
உணவு இடைவேளைக்கு முன்னரே ஸ்மித், வாட்சன், ஹேடினை வீழ்த்தி 85/3-லிருந்து 126/6 என்று தடுமாறச் செய்தார் தேவேந்திர பிஷூ. ஆனால் அதன் பிறகு ஆடம் வோஜஸ் ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தளர்வான ஷாட் ஒன்றைக்கூட ஆடவில்லை. சிறப்பான கவனத்துடனும், நிதானத்துடனும் அவர் தனது இன்னிங்ஸை திட்டமிட்டார்.
அரைசதம் அடித்த பிறகு மர்லன் சாமுயெல்ஸ் பந்தை புல் ஆடினார், ஜெர்மைன் பிளாக்வுட்டுக்கு அது கடினமான வாய்ப்பானது, பிடிக்க முடியவில்லை. 187-வது பந்தில் சதம் எடுத்த வோஜஸ், அதிக வயதில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்து ஜிம்பாப்வேயின் டேவிட் ஹட்டனை அந்த இடத்திலிருந்து நகர்ந்தினார்.
சதம் எடுத்த பிறகு 104 ரன்களில் இருந்த போது ஜெரோம் டெய்லர் பந்தில் கல்லியில் ஹோப் ஒரு சுலப கேட்சைத் தவறவிட்டார். ஹேசில்வுட்டுக்கும் கேட்ச் ஒன்று விடப்பட்டது. இவைதான் மே.இ.தீவுகளின் துன்பத்துக்குக் காரணமாகியுள்ளன.
126/6 என்ற நிலையில் மே.இ.தீவுகளிடத்தில் தீவிரம் இல்லை, ‘கில்லர் இன்ஸ்டிங்க்ட்’ இல்லை. ஏனோதானோவென்று பந்து வீச்சில் மாற்றம், களவியூகத்தில் ஆக்ரோஷமின்மை என்று ராம்தின்னின் கேப்டன்சி தகுதி மீது பெரும் சந்தேகம் கிளம்பியது.
தேவையில்லாமல் 3 விக்கெட்டுகள் எடுத்த பிஷூவை கட் செய்தார். பிறகு 5-6 ஓவர்களுக்குப் பிறகு கொண்டு வராமல் சற்றுப் பொறுத்து கொண்டு வந்தார். இதனால் டெய்ல் எண்டர்களே செட்டில் ஆயினர். பிஷூவுக்கு பந்துகள் ஷேன் வார்ன் போல் திரும்பின. நல்ல கேப்டன் நிச்சயம் நேற்று ஆஸ்திரேலியாவை 150க்குள் சுருட்டியிருப்பார்.
ஆனால் மே.இ.தீவுகள் ஆஸ்திரேலியாவை 126/6 என்பதிலிருந்து 318 ரன்கள் அடிக்க விட்டதோடு 2-வது இன்னிங்ஸில் 170 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் தோல்வி அபாயத்தில் வேறு உள்ளது.
இன்று 3-ம் நாள் ஆட்டம், 4-ம் நாளுக்குச் செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.