இந்தியா-வங்கதேசத்துக்கு இடை யிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான நேற்றும் 3 முறை மழை குறுக்கிட்டது. மழைக்கு இடையே விளையாடப்பட்ட நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 103.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 462 ரன்கள் குவித்துள்ளது.
ஷிகர் தவன் 173 ரன்களும், முரளி விஜய் 150 ரன்களும், அஜிங்க்ய ரஹானே 98 ரன்களும் குவித்தனர்.வங்கதேசத்தின் பதுல்லா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி யின் முதல் நாள் ஆட்டம் ஓரளவும், இரண்டாவது நாள் ஆட்டம் முற்றிலு மாகவும் மழையால் பாதிக்கப் பட்டன.
முரளி விஜய் சதம்
முதல்நாள் எடுத்திருந்த 239 ரன்களோடு 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடியது இந்திய அணி. தொடரந்து சிறப்பாக ஆடிய முரளி விஜய், தைஜுல் இஸ்லாம் வீசிய 64-வது ஓவரில் பவுண்டரி அடித்து டெஸ்ட் போட்டியில் தனது 6-வது சதத்தைப் (201 பந்துகளில்) பூர்த்தி செய்தார்.
இந்தியா 283 ரன்களை எட்டிய போது இந்த ஜோடியைப் பிரித்தார் ஷகிப் அல்ஹசன். கிரீஸுக்கு வெளி யில் வந்து பந்தை அடிக்க முயன் றார் தவன். ஆனால் பேட்டின் நுனியி ல் பட்ட பந்து, நேராக அல்ஹசன் கைக்கு செல்ல, அவர் எளிதாக கேட்ச் செய்தார். 195 பந்துகளைச் சந்தித்த தவன் 23 பவுண்டரிகளுடன் 173 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து வந்த ரோஹித் சர்மா 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அல்ஹசன் பந்துவீச்சில் போல்டாக, அடுத்ததாக வந்த கேப்டன் கோலி 14 ரன்களில் ஜுபைர் ஹுசைன் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். இதையடுத்து முரளி விஜயுடன் இணைந்தார் அஜிங்க்ய ரஹானே. இந்த ஜோடி அசத்தலாக ஆட, 84-வது ஓவரில் 350 ரன்களைக் கடந்தது இந்தியா.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரஹானே 64 பந்துகளில் அரை சதத்தை எட்ட, மதிய உணவு இடை வேளையின்போது 93 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 398 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ஆனால் அப்போது மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை ஓய்ந்த பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், 271 பந்துகளில் 150 ரன்களை எட்டிய விஜய், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.
அல்ஹசன் பந்துவீச்சில் விஜய் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றார். ஆனால் பேட்டில் படாமல் நழுவிய பந்து, அவருடைய கால் காப்பின் பின்புறத்தில் பட்டது. அப்போது அல்ஹசன் அவுட் கேட்க, பந்து ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் சென்றபோதும், நடுவர் தர்மசேனா எல்பிடபிள்யூ கொடுத்துவிட்டார். அப்போது இந்தியா 97.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 424 ரன்கள் எடுத்திருந்தது. விஜய்-ரஹானே ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது.
ரஹானே 98
பின்னர் வந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா 6 ரன்களில் நடையைக் கட்ட, அஸ்வின் களம்பு குந்தார். இதனிடையே சதமடிப் பார் என எதிர்பார்க்கப்பட்ட அஜிங்க்ய ரஹானே 98 ரன்கள் எடுத்திருந்தபோது அல்ஹசன் பந்து வீச்சில் போல்டு ஆனார். 103 பந்து களைச் சந்தித்த அவர் 14 பவுண்டரி களுடன் 98 ரன்கள் எடுத்த நிலை யில், 2 ரன்களில் 4-வது சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
தேநீர் இடைவேளைக்கு முன்னதாக 3-வது முறையாக மழை குறுக்கிட்டது. தேநீர் இடைவேளை நேரத்துக்குப் பிறகும் மழை தொடர்ந்ததால் 3-வது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆட்டநேர முடிவில் இந்தியா 103.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 462 ரன்கள் குவித்துள்ளது. அஸ்வின் 2, ஹர்பஜன் சிங் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 24.3 ஓவர்களில் 105 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், ஜுபைர் ஹுசைன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
டிராவை நோக்கி…
3 நாள் ஆட்டங்கள் முடிந்து விட்டன. இதுவரை 103.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு நாள் ஆட்டங்கள் மட்டுமே மீதமுள்ளன. இன்றும், நாளையும் 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப் புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. எஞ்சிய இரு நாள் ஆட்டங்களும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் இந்தப் போட்டி டிராவில் முடிவது உறுதியாகிள்ளது.