விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்: கடும் சவாலில் ஃபெடரர், முர்ரே, நடால்

பிடிஐ

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வரும் 29-ம் தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் யாருடன் யார் மோதுவது என்பதை தீர்மானிப்பதற்கான டிரா நேற்று நடைபெற்றது.

அதன்படி முன்னாள் சாம் பியன்களான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் டிராவின் ஒரு பாதியிலும், நடப்பு சாம்பியன் ஜோகோவிச், பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா ஆகியோர் மற்றொரு பாதியிலும் இடம்பெற்றுள்ளனர்.

இதனால் ஃபெடரர், முர்ரே, நடால் ஆகிய மூவரில் ஒருவர் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும். அதேநேரத்தில் ஜோகோவிச் எளிதாக இறுதிச்சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஜோகோவிச் தனது அரையிறுதியில் வாவ்ரிங்காவை சந்திக்க வாய்ப்புள்ளது.

முதல் சுற்றில் ஜெர்மனியின் பிலி்ப் கோல்ஸ்கிரைபருடன் மோதும் ஜோகோவிச், தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை சந்திக்க வாய்ப்புள்ளது. மற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளில் செக்.குடியரசின் மரின் சிலிச், ஜப்பானின் நிஷிகோரியையும், வாவ்ரிங்கா, டேவிட் கோபினையும் சந்திக்க வாய்ப்புள்ளது.

போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஃபெடரர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயினின் பெலிஸியானோ லோபஸையும், தாமஸ் பெர்டிச், ஜில்ஸ் சைமனையும், முர்ரே, சோங்காவையும், நடால் தனது சகநாட்டவரான டேவிட் ஃபெர ரையும் சந்திக்க வாய்ப்புள்ளது.

மகளிர் பிரிவைப் பொறுத்தவரையில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும், ரஷ்யாவின் மரியா ஷரபோவாவும் அரையிறுதியில் சந்திக்க வாய்ப்புள்ளது. செரீனா தனது முதல் சுற்றில் ரஷ்யாவின் மார்க்ரெட் கேஸ்பார்யனையும், ஷரபோவா தனது முதல் சுற்றில் பிரிட்டனின் ஜோஹன்னா கொன்டாவையும் சந்திக்கின்றனர்.

மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியனான செக்.குடியரசின் பெட்ரா விட்டோவாவும், ருமேனியாவின் சைமோனா ஹேலப்பும் சந்திக்க வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT