இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் தனது 2-வது இன்னிங்ஸில் 59 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான், இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இன்னும் 6 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. 4-வது நாளான இன்று முழுவதும் சிறப்பாக ஆடி வலுவான ஸ்கோரை குவித்தாலொழிய பாகிஸ்தான் தோல்வியில் இருந்து தப்பமுடியாது.
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 42.5 ஓவர்களில் 138 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 118.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணி மேலும் 11 ரன்கள் சேர்த்து 315 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சமீரா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ரங்கனா ஹெராத் 18 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக யாசிர் ஷா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அஹமது, அசார் அரைசதம்
முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் முகமது ஹபீஸ் 8 ரன்களில் நடையைக் கட்ட, அஹமது ஷெஸாத்துடன் இணைந்தார் அசார் அலி. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் சரிவிலிருந்து தப்பியது.
நிதானமாக ஆடிய அஹமது ஷெஸாத் 115 பந்துகளில் அரை சதமடிக்க தேநீர் இடைவேளையின்போது ஒரு விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான். இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது வீசப்பட்ட முதல் பந்தில் ஷெஸாத் ஆட்டமிழந்தார். அவர் 154 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து யூனிஸ்கான் களமிறங்க, மறுமுனையில் நின்ற அசார் அலி 126 பந்துகளில் அரைசதம் கண்டார். பாகிஸ்தான் 59 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சன்மை காரணமாக 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அசார் அலி 64 ரன்களுடனும், யூனிஸ்கான் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை தரப்பில் தமிகா பிரசாத், மேத்யூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.