ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று இன்றோடு முடிவுக்கு வருகிறது. மொஹாலியில் மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பஞ்சாபும், டெல்லியும் மோதுகின்றன. பஞ்சாப் முதலிடத்தைப் பிடித்துவிட்டது. டெல்லி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. இதனால் இந்த ஆட்டம் ஒப்புக்காவே விளையாடப்படுகிறது.
மும்பையில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தானும், நடப்பு சாம்பியன் மும்பையும் மோதுகின்றன. 14 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஆனால் 12 புள்ளிகளுடன் உள்ள மும்பை அணி அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வென்றாலொழிய அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது.
பிளே ஆப்: ரூ.40 கோடி
ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.40 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.15 கோடியும், இறுதிச்சுற்றில் தோல்வியடையும் அணிக்கு ரூ.10 கோடியும், அடுத்த இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.7.5 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.