விளையாட்டு

கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசிலை வீழ்த்தியது பராகுவே

செய்திப்பிரிவு

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த பிரேசில் அணியை காலிறுதியில் வீழ்த்திய பராகுவே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று பிரேசிலை வெளியேற்றியது பராகுவே.

சிலியில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் கான்செப்சியான் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பிரேசிலும் பராகுவே அணியும் மோதின.

நெய்மருக்கு 4 போட்டி களில் விளையாட தடைவிதிக் கப்பட்டுள்ளதால், அவர் இல்லாமல் களமிறங்கியது பிரேசில். ஆட்டம் தொடங்கிய 15-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் ராபின்ஹோ அட்டகாசமாக கோலடித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்க பராகுவே வீரர்கள் முயன்றபோதும் பலன் இல்லை. இதனால் முதல் பாதியில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் பராகுவே தனக்கான வாய்ப்புக்காக தொடர்ந்து போராடியது. இதற்கு 72-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. பெனால்டி வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட டேர்லிஸ் கான்ஸலெஸ் கோலடித்தார்.

இரு அணி வீரர்களும் ஆக்ரோஷம் காட்டியதால் போட்டி யில் 5 வீரர்கள் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டனர். பிரேசில் அணியில் டானி அல்வெஸ், பிலிப்பி கூடின்கோ ஆகியோருக்கும், பராகுவே அணியில் பாப்லே அகுய்லர், புருனோ வல்டெஸ் மற்றும் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஓஸ்வல்டோ மார்டின்ஸ் ஆகியோரும் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டனர்.

பெனால்டி ஷூட் அவுட்

கூடுதல் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலை வகித்தன. எனவே, பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. முதல் வாய்ப்பில் பிரேசில் வீரர் பெர்னான்டின்கோ, பராகுவே வீரர் மார்டின்ஸ் ஆகியோர் கோலடித்தனர். 2-வது வாய்ப்பை பிரேசில் தவறவிட்டது. மூன்றாவது வாய்ப்பில் இரு அணிகளும் கோலடித்தன. இதனால், பராகுவே 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. நான்காவது வாய்ப்பை இரு அணிகளும் வீணடித்தன.

கடைசி வாய்ப்பில் பிரேசில் கோலடித்தது. பராகுவே அணியின் கான்ஸலெஸ் வாய்ப்பைத் தவறவிடாமல் கோலடிக்க 4-3 என்ற கோல்கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பராகுவே.

முதல் அரையிறுதிப் போட்டியில் பெருவும் சிலியும் இன்று (29-ம்தேதி) மோதுகின்றன. 2-வது அரையிறுதியில் அர்ஜெண்டினா அணியை நாளை எதிர்கொள்கிறது பராகுவே.

SCROLL FOR NEXT