விளையாட்டு

வருங்காலத்துக்கான வேகப்பந்து வீச்சு திறமைகள் இந்தியாவில் உள்ளன: கிளென் மெக்ரா

செய்திப்பிரிவு

எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாடமியின் இயக்குநராக இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆஸ்திரேலிய கிரேட் கிளென் மெக்ரா, இந்திய வேகப்பந்துவீச்சு திறமைகள் பற்றி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எம்.ஆர்.எஃப். அகாடமியிலிருந்து அடுத்து வரும் வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றி கிளென் மெக்ரா கூறும் போது, “வருண் ஆரோன், ஈஷ்வர் பாண்டே ஆகியோர் சிறப்பாக வீசி வருகின்றனர். மேலும் பல்தேஜ் சிங் இருக்கிறார், இவரிடம் நல்ல ஆக்‌ஷன் உள்ளது. சந்தீப் வாரியர் என்பவரும் நம்பிக்கை அளிக்கிறார். அஸ்வின் கிரிஸ்ட் என்பவரும் நெடுந்தூரம் முன்னேறி வந்துள்ளார். இவர் சரியான இடங்களில் பந்தை பிட்ச் செய்கிறார், தான் என்ன செய்கிறோம் என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார் அஸ்வின் கிரிஸ்ட்.” என்றார் கிளென் மெக்ரா.

எம்.ஆர்.எஃப். தலைமைப் பயிற்சியாளர் எம்.செந்தில்நாதன் கூறும் போது, “ஹர்திக் பாண்டியா, வீர் பிரதாப் சிங், ராகுல் ஷுக்லா ஆகியோரும் பயிற்சி முகாமில் கலந்து கொள்கின்றனர், மேலும் பிசிசிஐ நிறைய வேகப்பந்து வீச்சாளர்களை பயிற்சிக்க்கு அனுப்பியுள்ளது” என்றார்.

ரவிசாஸ்திரி பற்றிய கேள்விக்கு கிளென் மெக்ரா...

"ஒரு பயிற்சியாளர் செய்யும் வேலையை ரவிசாஸ்திரி செய்கிறார் என்றால் என்ன பிரச்சினை? ஆனால் ரவிசாஸ்திரி என்ன மாதிரி பங்கு வகிக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. என் காலத்தில் ஆஸ்திரேலிய அணியில் பயிற்சியாளரை விட மேலாளர்தான் அதிகம் தேவைப்படுவார்” என்றார்.

மிட்செல் ஸ்டார்க் எழுச்சி பற்றி...

அவர் உயரமாக இருக்கிறார், மணிக்கு 150கிமீ வீசுகிறார், புதிய பந்தை ஸ்விங் செய்கிறார், பழைய பந்தை ரிவர்ஸ் செய்கிறார். மேலும் பயங்கரமான யார்க்கர் ஒன்றையும் அவர் வைத்துள்ளார். இவருக்கு முன்பாக தற்போது லஷித் மலிங்கா மட்டுமே இந்த யார்க்கரை சிறப்பாக வீசி வருகிறார். இன்னும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் யார்க்கரைப் பழக வேண்டும்.

ஆனால் அவர்கள் யார்க்கர்களை பயிற்சி செய்வதில்லை என்பது வெட்கக் கேடானது. வலைப்பயிற்சியில் யார்க்கர்களை வீசும் போது கொஞ்சம் பின்னாலிலிருந்து வீசுவது நலம், அப்போதுதான் லெந்த் சரியாக அமையும். யார்க்கர்களை வீசும் போது அப்போதுதான் நோ-பால்களை வீசாமல் தவிர்க்கலாம். குறைந்த ஓவர் போட்டிகளில் யார்க்கர் ஒரு சிறந்த ஆயுதம், ஆனால் இனி டெஸ்ட் போட்டிகளிலும் அது அச்சுறுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

டி20, டெஸ்ட் வேறுபாடு குறித்து..

டி20 கிரிக்கெட்டில் தினுசு தினுசாக நாம் பந்து வீச வேண்டும், அளவு மற்றும் திசையை பந்துக்கு பந்து மாற்ற வேண்டும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் அப்படியல்ல, இங்கு சீராக லெந்த்தில் வீசுவது மிக முக்கியம். சீரான முறை, அளவு, மற்றும் திசை, பந்தின் ஸ்விங் மற்றும் எழும்புதல் மிக முக்கியம். பந்தை எந்த இடத்தில் பிட்ச் செய்வது என்பதை முடிவெடுப்பது மிக முக்கியம். இப்போதெல்லாம் இவற்றை நடப்பு வேகப்பந்து வீச்சாளர்கள் கடைபிடிப்பதில்லை.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 400 விக்கெட் சாதனை பற்றி..

ஜிம்மி ஒரு நல்ல பவுலர், குறிப்பாக இங்கிலாந்தில் அவர் சிறப்பாக வீசக்கூடியவர். பந்துகள் ஸ்விங் ஆகும் ஆட்டக்களங்களில் அவர் சிறப்பானவர், ஆனால் அயல்நாட்டில் அவரால் சோபிக்க முடிவதில்லை.

இவ்வாறு அந்தப் பேட்டியில் கூறினார் மெக்ரா.

SCROLL FOR NEXT