வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் 308 ரன்கள் இலக்கைத் துரத்தி வரும் இந்திய பேட்டிங்கின் போது நடுவர் தவறால் சிறு சுவாரசியம் ஏற்பட்டது.
ஆட்டத்தின் 10-வது ஓவரை மஷ்ரபே மோர்டசா வீசினார். தவண் 15 ரன்களில் மோர்டசாவின் 2-வது பந்தை எதிர்கொண்டார். பந்து அருமையாக உள்ளே வந்து தவணின் மட்டை உள்விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமிடம் கேட்சாகச் சென்றது.
சுலபமான அந்தக் கேட்சை அவர் கோட்டைவிட்டார். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக நடுவர் ராட் டக்கர் அவுட் என்றார். அவர் பார்க்கும் போது பந்து பிடிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் முஷ்பிகுர் மிக மோசமாக அதனை தவற விட்டது தெரியாமல் கேட்ச் பிடிக்கப்பட்டதாக டக்கர் அவுட் என்றார்.
தவணும் பந்தைக் கவனிக்காமல் அவுட் என்று பெவிலியன் நோக்கி சில அடிகள் நடக்கத் தொடங்கினார். கேட்சை விட்டது தெரிந்தவுடன் வங்கதேச வீரர் ஒருவர் தவணை ரன் அவுட் செய்தார், அதற்கும் முறையீடு எழுப்பப் பட்டது பெரிய வேடிக்கை.
காரணம் பேட்ஸ்மென் தவறான அவுட்டுக்கு வெளியேறும்போது அது ரன் ஓடியதாக கணக்கில் வராது, எனவே அது விதிமுறைகளின் படியே ரன் அவுட் இல்லை.
ஆனால் வங்கதேச வீரர்கள் கேட்ச் கோட்டைவிட்ட ஏமாற்றத்தில் இதற்கும் அப்பீல் செய்தனர். பிறகு நடுவர்கள் வந்து அவர்களுக்கு புரிய வைக்க நேரிட்டது.
இந்தியா தடவலாகத் தொடங்கினாலும் அதன் பிறகு சில ஷாட்களை ஆடத் தொடங்கி 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்துள்ளது.
தவண் 20 ரன்களுடனும், ரோஹித் சர்மா 3 பவுண்டரி ஒரு அபாரமான சிக்சருடன் 45 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.