விளையாட்டு

மோர்கன், ரூட் சதங்களுடன் சாதனை ரன் துரத்தலில் இங்கிலாந்து வெற்றி

இரா.முத்துக்குமார்

டிரெண்ட்பிரிட்ஜில் நேற்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து நிர்ணயித்த 350 ரன்கள் இலக்கை இங்கிலாந்து 44 ஓவர்களில் வெற்றிகரமாகத் துரத்தி நியூஸிலாந்தை வீழ்த்தியது.

இதன் மூலம் இங்கிலாந்து ஒருநாள் போட்டி ரன் விரட்டலில் புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து துரத்தி வெற்றி பெற்ற அதிகபட்ச ரன்கள் இலக்கு இதுவே. 44 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 350 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அபார வெற்றியை ஈட்டியது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் விளாசியது. கேன் வில்லியம்ன்சன் மீண்டும் அபாரமாக ஆடி 90 ரன்கள் எடுத்ததோடு ஒருநாள் கிரிக்கெட்டில் 3,000 ரன்களைக் கடந்தார். கப்தில், எலியட் அரைசதங்கள் மற்றும் கடைசியில் சாண்ட்னரின் 19 பந்து 44 ரன்களினால் நியூஸிலாந்து கடைசி 8.3 ஓவர்களில் 99 ரன்களை விளாசி 349 ரன்களை எட்டியது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஹேல்ஸ், ராய் மூலம் 10.4 ஓவர்களில் 100 ரன்கள் அதிரடி தொடக்கம் கண்டது. 12.5 ஓவர்களில் 111/2 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த ஜோ ரூட், இயன் மோர்கன் ஜோடி சுமார் 27 ஓவர்களில் 198ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்து சாதனை வெற்றியை பெற பங்களிப்பு செய்தது.

இயன் மோர்கன் 82 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 113 ரன்களை விளாசித் தள்ள, ஜோ ரூட் 97 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்தார். மோர்கன் அவுட் ஆகும் போதே ஸ்கோர் 39.1 ஓவர்களில் 309 ரன்கள் வந்து விட்டது. இவ்வளவு சுலபமாக 350 ரன்களை எந்த அணியாவது துரத்தியிருக்குமா என்பது சந்தேகமே. 44 ஓவர்களில் 350 ரன்கள் இலக்கு ஒன்றுமில்லாமல் ஆனது.

நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வீலர் 8 ஓவர்களில் 75 ரன்களை வாரி வழங்கினார். சவுத்தி 10 ஓவர்களில் 70 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். மெக்லீனாகன், ஹென்றி, சாண்ட்னர் என்று அனைவரும் ஓவருக்கு 7 ரன்களுக்கும் மேல் கொடுத்தனர். இங்கிலாந்து அடித்த மொத்த 11 சிக்சர்களில் வீலர் 4-ஐயும், ஹென்றி 4-ஐயும் விட்டுக் கொடுத்தனர். மொத்தம் 35 பவுண்டரிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் 32 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தனர்.

மோர்கன், அதிவேகப் பவுலர் ஹென்றியை டீப் மிட்விக்கெட் ஸ்டாண்டுக்கு சிக்ஸ் அடித்து சதம் கண்டார். ஜோ ரூட்டுக்கு 9 ரன்களில் இருந்த போது ராஸ் டெய்லர் கேட்சைக் கோட்டை விட்டார். ஆனால் அவரது ஆட்டம் அதன் பிறகு தவறில்லாதது. மோர்கனை மெக்கல்லம் நெருக்கினாலும் அவர் நேராக அடித்த ஷாட்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஷார்ட் பிட்ச் பந்துகள் முறையாக எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டன.

அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்கத்தில் மிகவும் ஆக்ரோஷமாக ஆடினார், 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 67 ரன்களை விளாசினார். ராய் 35 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 38 ரன்கள் விளாசினார், இவர்தான் வீலரை நடந்து வந்து லாங் ஆனில் சிக்சர் தூக்க அதன் பிறகு ஹேல்ஸ் உட்புகுந்தார்.

இருவரும் ஆட்டமிழந்த பிறகு ராஸ் டெய்லர் விட்ட கேட்சைத் தவிர மோர்கனையும், ரூட்டையும் அடக்க முடியாது தவித்தது நியூஸிலாந்து.

முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியில் பிரெண்டன் மெக்கல்லம் தனது பாணியில் 31 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்தார். மார்டின் கப்தில் 66 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 53 ரன்கள் எடுக்க இருவரும் இணைந்து 13 ஓவர்களில் 88 ரன்கள் தொடக்கத்தைக் கொடுத்தனர்.

ராஸ் டெய்லர் 42 ரன்களை எடுத்து கேன் வில்லியம்சனுடன் இணைந்து 101 ரன்களைச் சேர்த்தார். கிராண்ட் எலியட் 55 ரன்களையும், சாண்ட்னர் அதிரடி முறையில் 19 பந்துகளில் 44 ரன்களையும் எடுத்தனர். அடில் ரஷீத் என்பவரை தவறாக மோர்கன் கடைசியில் கொண்டு வர 48-வது ஓவரில் 28 ரன்கள் ஒரே ஓவரில் விளாசப்பட்டது.

ஆட்ட நாயகனாக இயன் மோர்கன் தேர்வு செய்யப்பட்டார். இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது. இப்போதைக்கு தொடர் 2-2 என்று சமன் ஆகியுள்ளது.

SCROLL FOR NEXT