விளையாட்டு

2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு பிறகு ஷாகித் அப்ரீடி ஓய்வு

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறலாம் என்று பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரீடி தெரிவித்துள்ளார். ஆனால் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அப்ரீடி 4 ஆண்டுகளுக்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெற்றார். “2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் நான் உட்பட 2 அல்லது 3 மூத்த வீரர்களுக்கு முக்கியமானது, எனவே அதன் பிறகு நான் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறலாம் என்றிருக்கிறேன், ஆனால் தொடர்ந்து இருபது ஓவர் கிரிக்கெட்டில் விளையாடுவேன்.

நான் எப்போதுமே கூறிவருகிறேன், எனது உடல் தகுதி, ஆட்டம் ஆகியவற்றைப் பொறுத்தே என் கிரிக்கெட் என்று. 2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் எனது ஆட்டத்திறனைப் பார்த்த பிறகு நான் முடிவெடுப்பேன்.

கேப்டன்சி என்பது ஒரு வீரருக்குக் கிடைக்கும் மரியாதை. கடந்த காலத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை மறந்து விட்டேன், எனவே நான் கேப்டனாக விருப்பப்படுகிறேன். கேப்டன் பதவி எல்லா வீரர்களின் விருப்பமாகவும் உள்ளதுதான்.

அணியில் நீடித்திருப்பதாக நான் ஆடுவதில்லை, என்னிடம் உள்ள ஆட்டட்திறனை நாட்டுக்காக எப்பவுமே கொடுத்திருக்கிறேன்” என்று லாகூரில் செய்தியாளர்களிடம் கூறிய அப்ரீடி இந்தியாவுடனான இருதரப்பு கிரிக்கெட் தொடர் ஏற்பாடாகியுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்த அப்ரீடி "உலகிற்கு இந்தியா எதிர்மறையான செய்தியை அளித்துள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் சென்று விளையாட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்" என்றார்.

SCROLL FOR NEXT