வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய விதம் தனக்கு ஏமாற்றமளிப்பதாக கேப்டன் தோனி தெரிவித்தார்.
உமேஷ் யாதவ், புவனேஷ் குமார், மற்றும் மோஹித் சர்மா ஆகியோர் பந்துவீச்சில் வேகம், இல்லை, நேர்த்தியும் இல்லை. விக்கெட் எடுப்பது போன்ற பந்து வீச்சு அல்ல அது.
இந்நிலையில் வங்கதேசத்தின் முதல் ஒருநாள் போட்டியை ஆடும் முஸ்தபிசுர் ரஹ்மான் அருமையாக தனது பந்துகளை பல்வேறு விதமாக வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக வங்கதேச பந்துவீச்சில் இருந்த ஆக்ரோஷம் இந்திய வீச்சாளர்களிடத்தில் இல்லை.
இது குறித்து தோனி கூறும்போது, “தோல்வி ஏமாற்றமளிக்கிறது. ஆனால் வங்கதேச அணி முதல் பந்து முதல் நம் பந்து வீச்சாளர்களை அடித்து ஆடத் தொடங்கிய விதத்திலிருந்து திறமையான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இடையில் மழை வந்தது உதவிகரமாக அமைந்தது. அவர்கள் 330 ரன்களை எடுத்திருக்க வேண்டும், ஆனால் 307 ரன்களுக்கு அவர்களை மட்டுப்படுத்தினோம். ஆனால் பேட்டிங் நாங்கள் விரும்பிய அளவுக்கு இல்லமல் போனது.
சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக வீசினர், ரெய்னாவின் பங்களிப்பு முக்கியமானது, ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய விதம் ஏமாற்றமளித்தது. வங்கதேச பேட்ஸ்மென்கள் வேகப்பந்து வீச்சாளர்களை நன்றாக விளையாடினர்.
அதே போல் பந்து வீச்சில் அவர்கள் பந்தின் வேகத்தை மிகவும் நுட்பமாக மாற்றி மாற்றி வீசியது என்னைப் பெரிதும் கவர்ந்தது. வேகத்தை கூட்டி, குறைத்து சரியான அளவில் வீசினர். அவர்கள் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதற்கு காரணமே அவர்களது வேகப்பந்து வீச்சாளர்கள்தன்.
எனவே 4 வேகப்பந்த் வீச்சாளர்களுடன் அவர்கள் களமிறங்கியது எங்களுக்கு ஆச்சரியமளிக்கவில்லை. மேலும் ஷாகிப் அல் ஹசன் இருக்கிறார். அவர் எப்போது அழைக்கப்பட்டாலும் வீசக்கூடியவர். இது போன்ற ஸ்லோ பிட்சில் பவுன்ஸ் என்பது சிரமம் அளிக்கக் கூடியது. நல்ல உயரம் எழும்பினாலும் வேகம் இல்லாததால் ஆடுவது கடினம். அவர்கள் இதனை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். எந்த லெந்த்தில் வீச வேண்டும் என்பதையும் அவர்கள் சிறப்பாக செயல்படுத்தினர், இரு அணிகளுக்கும் உள்ள வேறுபாடு இதுவே.
மேலும் 300 ரன்களை துரத்தும் போது பார்ட்னர்ஷிப்கள் முக்கியம். ஆனால் நடுவில் விக்கெட்டுகளை இழந்து கொண்டேயிருந்தோம். தோல்வி காயம் ஏற்படுத்துகிறது. கடந்த போட்டிகளில் என்ன செய்தோம் என்பதல்ல விஷயம், அன்றைய தினத்தில் அணியின் வெற்றிக்காக எப்படி ஆடுகிறோம் என்பதே முக்கியம், வங்கதேசம் அந்த விதத்தில் எங்களை விட சிறப்பாக ஆடினர்.
எனவே வங்கதேசத்தை வீழ்த்த புதிய திட்டம் தீட்ட வேண்டும்” என்றார் இந்திய கேப்டன் தோனி.