20 வயதுக்குட்பட்டோருக்கான (யு-20) உலகக் கோப்பை கால்பந்து போட்டி நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. அதன் இறுதிப் போட்டி ஆக்லாந்தில் வரும் 20-ம் தேதி நடைபெற வுள்ளது.
இறுதிப் போட்டியைக் காண பிஃபா தலைவர் பதவியை கவனித்து வரும் செப் பிளேட்டர் நியூஸிலாந்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிளேட்டர் திடீரென அங்கு செல்லும் திட்டத்தை ரத்து செய்துள்ளார். இது தொடர்பாக பிஃபா சார்பில் வெளியிடப்பட் டுள்ள அறிக்கையில், “ஜூரிச்சில் பல்வேறு பணிகள் இருப்பதால் இறுதிப் போட்டியைக் காண பிளேட்டர் நியூஸிலாந்து செல்ல மாட்டார்“ என தெரிவிக்கப் பட்டுள்ளது.
1998-ம் ஆண்டு முதல் பிஃபா தலைவராக இருந்து வந்த செப் பிளேட்டர், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று 5-வது முறையாக தலைவர் ஆனார். ஆனால் பிஃபாவில் நிகழ்ந்த பெரும் ஊழல் காரணமாக அடுத்த சில தினங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிளேட்டருக்கு வேறு பணிகள் இருப்பதாக பிஃபா சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், ஊழல் விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாகவே அவர் இறுதிப் போட்டியைக் காண செல்லவில்லை என கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற பிஃபா தேர்தலில் செப் பிளேட்டருக்கு எதிராக நியூஸிலாந்து வாக்களித்தது. நியூஸிலாந்து கால்பந்து சங்க தலைவர் ஆன்டி மார்ட்டின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “பிளேட்டர் இறுதிப் போட்டியைக் காண இங்கு வந்தால், இறுதிப் போட்டியின் முக்கியத்துவம் குறைந்து போய்விடும். பிளேட்டர் மீதே அனைவருடைய கவனமும் இருக்கும். அதனால் அவர் இங்கு வரமாட்டார் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.