விளையாட்டு

ரோஜர் பெடரர், ஜோகோவிச் இருவரும் ஒருவரையொருவர் விரும்பாதவர்கள்: போரிஸ் பெக்கர்

செய்திப்பிரிவு

டென்னிஸ் ஆட்டம் அதன் பழைய உத்வேகத்தை இழந்ததன் காரணம் வீரர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படையாக காண்பிக்க முடிவதில்லை, காரணம் 'மோசமான நடத்தை'க்காக அபராதம் கட்ட நேரிடுகிறது என்கிறார் முன்னாள் ஜெர்மனி வீரர் போரிஸ் பெக்கர்.

தற்போது செர்பிய வீரர் ஜோகோவிச்சின் பயிற்சியாளர் போரிஸ் பெக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரும், ஜோகோவிச்சும் ஒருவரையொருவர் விரும்பாதவர்கள் என்பது டென்னிஸ் உலகில் ‘திறந்த ரகசியம்’என்று கூறும் போரிஸ் பெக்கர், அபராத அச்சத்தினால் நட்சத்திர வீரர்கள் தங்களிடையே ‘போலி நட்புறவு’ பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

அதேபோல் ரோஜர் பெடரரும் நம் கண்ணுக்கினியவராகத் தெரிகிறார். உண்மையில் நம் கண்களுக்குத் தெரியும் அளவுக்கு அவர் இனிமையானவர் அல்ல என்று கூறுகிறார் பெக்கர்.

தனது சமீபத்திய சுயசரிதையில் அவர் எழுதும் போது, “நான் விளையாடிய காலத்தை விட டென்னிஸ் தற்போது சோர்வளிக்கும் ஆட்டமாக உள்ளது என்று சிலர் என்னிடம் எப்போதாவது கூறுவதுண்டு. நான் ஏன் என்று அவர்களிடம் கேட்ட போது, டென்னிஸ் ஆட்டத்தில் ஒருகாலத்தில் இருந்தது போல் பல்வேறு குணாம்சங்களை வெளிப்படுத்தும் ‘கேரக்டர்கள்’ இல்லை என்பதை சுட்டிக் காட்டினர்.

நான் அவர்களிடம் கூறினேன், இப்போதும் பயங்கர கேரக்டர்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை, ஏனெனில் அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை. காரணம், மைதானத்தில் எங்கு பார்த்தாலும் மைக்ரோபோன்கள். இவர்கள் பேசும் ஒவ்வொரு கோபாவேச வார்த்தையையும் எதிர் வீரரைப் பற்றிய அசிங்கமான வசைகளையும் மைக்ரோபோன்கள் தெளிவாக பிடித்து விடுகின்றன, இதனால் அபராதம் கட்டுவதுதான் எஞ்சுகிறது.

ஒவ்வொரு ஆட்டத்திலும் 10,000 அல்லது 20,000 டாலர்கள் அபராதம் கட்டமுடியுமா என்ன? என்று எழுதியுள்ளார்.

மேலும் ஜோகோவிச்-பெடரர் பற்றி, “இருவரும் ஒருவரையொருவர் விரும்ப மாட்டார்கள். காரணம் அனைத்து காலத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கும் ஒரு டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், ஏனெனில் அவரை அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் இதனை யோசிக்கும் போது ஒன்று தோன்றுகிறது, அனைவராலும் ஒருவர் எப்படி விரும்பத்தகுந்தவராக இருக்க முடியும்? அவரது மென்மை பிம்பத்தினால் அதிகமாக சம்பாதிக்கிறார், அவருடைய உண்மையான உணர்வுகள் வெளிப்பட்டால் அவர் கொஞ்சம் குறைவாகவே சம்பாதிப்பவராக இருப்பார்” என்றார் போரிஸ் பெக்கர்.

SCROLL FOR NEXT