இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 2008 மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுடன் முழு இருதரப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை.
அண்மையில் இந்தியா வந்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷஹார்யார் கான், இந்த கிரிக்கெட் தொடர் நடத்துவது தொடர்பாக மிகுந்த தீவிரம் காட்டிய நிலையில் மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கேட்டபோது, “இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக வரும் தகவல்கள் எங்கிருந்து வருகின்றன எனத் தெரியவில்லை. இதுவரை முடிவெடுக்கவில்லை” என்றார்.
2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப் பட்டது. அதன்பிறகு தற்போதுதான் ஜிம்பாப்வே பாகிஸ் தானில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளது.