பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஸ்விட்சர்லாந்தின் டிமியா பேசின்ஸ்கை ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செரீனா 6-1, 6-3 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 17-வது இடத்தில் இருந்த இத்தாலியின் சாரா எர்ரானியைத் தோற்கடித்தார்.
பிரெஞ்சு ஓபன் போட்டியின் கடைசி 3 ஆட்டங்களில் முதல் செட்டை இழந்து வெற்றி கண்ட செரீனா, இந்த முறை ஆரம்பம் முதலே அபாரமாக ஆடி இரு செட்களோடு போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.
வெற்றி குறித்துப் பேசிய செரீனா, “கடந்த 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக முதல் செட்டை இழந்தேன். ஆனால் இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரையில் நான் சிறப்பாக ஆட வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் என்னை எதிர்த்து விளையாடிய சாரா எர்ரானி, சிறந்த வீராங்கனை” என்றார்.
செரீனா தனது அரையிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் டிமியா பேசின்ஸ்கையை சந்திக்கிறார். டிமியா தனது காலிறுதியில் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் வான் உய்ட்வாங் கைத் தோற்கடித்தார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார் டிமியா.
சானியா ஜோடி தோல்வி
மகளிர் இரட்டையர் காலிறுதி யில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 5-7, 2-6 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் பெத்தானி மடேக் சேன்ட்ஸ்-செக்.குடியரசின் லூஸி சஃபரோவா ஜோடியிடம் தோல்வி கண்டது. இதன்மூலம் பிரெஞ்சு ஓபனில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்தவரும், 2009 பிரெஞ்சு ஓபன் சாம்பியனுமான ஸ்விட்சர்லந்தின் ரோஜர் ஃபெடரர் தோல்வி கண்டார். அவர் 4-6, 3-6, 6-7 (4) என்ற நேர் செட்களில் சகநாட்டவரான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவிடம் தோல்வி கண்டார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல்முறையாக ஃபெடரரை வீழ்த்தியிருக்கும் வாவ்ரிங்கா, தனது அரையிறுதியில் பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவை சந்திக்கிறார். சோங்கா தனது காலிறுதியில் 6-1, 6-4, 4-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நிஷிகோரியை தோற்கடித்தார்.