தென் அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற கால்பந்து போட்டியான கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சர்வதேச தரவரிசையில் 89-வது இடத்தில் இருக்கும் பொலிவியா அணி 3-2 என்ற கோல் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 31-வது இடத்தில் இருக்கும் ஈகுவடார் அணிக்கு அதிர்ச்சி தோல்வியளித்தது.
கடந்த 18 ஆண்டுகளில் கோபா அமெரிக்கா போட்டியில் பொலிவியா அணி பதிவு செய்த முதல் வெற்றி இதுதான். சொந்த மண்ணில் பொலிவியா மிகச்சிறப்பாக விளையாடி வந்திருக்கிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் அந்நிய மண்ணில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் அந்த அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும்.
சிலியின் வால்பரைசோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்ட நேரம் முழுவதும் பொலிவியாவின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. ஈகுவடார் அணியினர் செய்த சில தவறுகள் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அதே நேரத்தில் அசத்தலாக ஆடிய பொலிவியா அணி, ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தியது.
கார்னரில் இருந்து பொலிவியா மிட்பீல்டர் மார்ட்டின் ஸ்மெட்பெர்க் மிகத் துல்லியமாக கோல் கம்பத்தை நோக்கி பந்தை உதைக்க, அந்த அணியின் மூத்த வீரரான ரொனால்ட் ரால்டேஸ் தலையால் முட்டி கோலாக்கினார். இதன்பிறகு 18-வது நிமிடத்தில் ஸ்மெட்பெர்க் கோலடிக்க, பொலிவியா 2-0 என முன்னிலை பெற்றது.
இதன்பிறகு 38-வது நிமிடத்தில் ஈகுவடார் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் இன்னர் வேலன்சியா பந்தை கோல் கம்பத்தை நோக்கி உதைக்கும் முன்னதாகவே அதே அணியைச் மில்லர் பொலானோஸ் கோல் ஏரியாவுக்குள் வந்தார்.
இதையடுத்து முதல் வாய்ப்பை ரத்து செய்த நடுவர், மீண்டும் பெனால்டி கிக் பகுதியில் இருந்து பந்தை உதைக்குமாறு வேலன்சியாவிடம் கூறினார். 2-வது வாய்ப்பில் வேலன்சியா உதைத்த பந்தை பொலிவியா கோல் கீப்பர் ரொமெல் குயினோனென்ஸ் முறியடிக்க, ஈகுவடாரின் கோல் வாய்ப்பு தகர்ந்தது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய பொலிவியா அணிக்கு 43-வது நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில் மார்செலோ மார்ட்டின் கோலடிக்க, பொலிவியா 3-0 என முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஈகுவடாரின் வேலன்சியாவும், 81-வது நிமிடத்தில் மில்லர் பொலானோஸும் கோலடித்தனர்.
எனினும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இறுதியில் பொலி வியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது பொலிவியா.
மற்றொரு ஆட்டம்
சான்டியாகோவில் நடைபெற்ற மெக்ஸிகோ-சிலி அணிகள் இடை யிலான மற்றொரு லீக் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மெக்ஸிகோ தரப்பில் மத்தியாஸ் ஊசோ இரு கோல்களை யும் (21 மற்றும் 66-வது நிமிடங் களில்), ரால் ஜிமென்ஸ் ஒரு கோலும் (29) அடித்தனர். சிலி தரப்பில் ஆர்டுரோ விடால் இரு கோல்களை யும் (22 மற்றும் 55-வது நிமிடங் களில்), எட்வர்ட் வர்காஸ் ஒரு கோலும் (42) அடித்தனர்.