விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட்: நியூஸிலாந்து பதிலடி, இங்கிலாந்து 350 ரன்கள்

செய்திப்பிரிவு

இங்கிலாந்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் தொடரில் முதல் இன்னிங்ஸில் தான் எடுத்த அதே 350 ரன்களுக்குள் இங்கிலாந்தையும் சுருட்டி பதிலடி கொடுத்துள்ளது நியூஸிலாந்து.

இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 72.1 ஓவர்களில் 350 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரோஞ்சி அதிகபட்சமாக 88 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் பிராட் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

வலுவான தொடக்கம்

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்துக்கு லித்-குக் ஜோடி அபார தொடக்கம் தந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்தது. இதனால், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. குக் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். 188 பந்துகளில் சதமடித்த லித், 107 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அதைத்தொடர்ந்து பேலன்ஸ் (29), ரூட் (1), ஸ்டோக்ஸ் (6) ரன்களில் ஆட்டமிழக்க இங்கி லாந்து தடுமாறியது. 2-ம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது.

நியூஸி. அபாரம்

பெல் 12, ஜோஸ் பட்லர் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் நியூஸிலாந்து பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். டிம் சவுத்தியின் பந்து வீச்சில் அனல் பறந்தது.

ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரிலேயே பெல்லை வெளி யேற்றி அதிர்ச்சியளித்தார் சவுத்தி. பெல் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் வரிசையாக இங்கிலாந்து வீரர்கள் நடையைக் கட்டினர். பட்லர் (10), அலி (1) என சொற்ப ரன்களில் சவுத்தியின் வேகத்துக்குப் பணிந்தனர். இதனால், இங்கிலாந்து 267 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஸ்டூவர்ட் பிராட் வந்த வேகத்தில் வெளுத்து வாங்கினார். அவர் 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் உட்பட 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக 9-வது விக்கெட்டாக வுட் (19) ஆட்டமிழந்தார்.

இதனால் இங்கிலாந்து 108.2 ஓவர்களில் 350 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆண்டர்சன் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் சவுத்தி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்

சுவாரஸ்யமான ஆட்டம்

நியூஸிலாந்தை 350 ரன்களில் கட்டுப்படுத்திய பிறகு, இங்கிலாந்து முதல் விக்கெட்டுக்கு வலுவான அடித்தளம் அமைத்தது. இதனால் அந்த அணி அதிக ரன்கள் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சு மற்றும் இங்கிலாந்தின் சொதப்பலான பேட்டிங்கால் நியூஸிலாந்தின் கை ஓங்கியது. பதிலடி கொடுத்த நியூஸிலாந்து, இங்கிலாந்தை 300 ரன்களுக்குள் சுருட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடைசிக் கட்டத்தில் களமிறங்கி அதிரடியாக ஆடிய பிராட் ஆட்டத்தின் போக்கை மாற்றியமைத்தார். இதனால் இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் தலா 350 ரன்கள் குவித்தன. நியூஸிலாந்து 72.1 ஓவர்களிலும், இங்கிலாந்து 108.2 ஓவர்களிலும் இந்த ரன்னை எட்டின.

8-வது முறை

இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் சமமான ஸ்கோர் குவிப்பது இது 8-வது முறை யாகும். 7 போட்டிகளில் 4 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.

நியூஸி. பேட்டிங்

2-வது இன்னிங்ஸைத் தொடங் கிய நியூஸிலாந்து 27 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. மெக்கல்லம் 4 ரன்களுடனும், மார்டின் கப்டில் 70 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

SCROLL FOR NEXT