விளையாட்டு

இந்தியாவின் ரன் மழையை நிறுத்தியது நிஜ மழை

செய்திப்பிரிவு

இந்தியா - வங்கதேசம் இடையே ஃபதுல்லாவில் இன்று காலை தொடங்கிய டெஸ்ட் போட்டி மழையால் தடைபட்டது.

தொடர்ந்து உணவு இடைவேளை எடுக்கப்பட்டது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 107 ரன்களை எடுத்துள்ளது. ஷிகர் தவன், முரளி விஜய் களத்தில் இருந்தனர்.

விராட் கோலி முழுநேர டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றவுடன் இந்திய அணி ஆடும் முதல் போட்டி என்பதால் இந்த டெஸ்ட் போட்டியின் மீது அதிக வெளிச்சம் விழுந்துள்ளது. வங்கதேச அணியும், உலகக் கோப்பை, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் தொடர் வெற்றி என புது எழுச்சியுடன் களமிறங்கியுள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்பதால், டாஸ் தோல்வி குறித்து வங்கதேச கேப்டன் ரஹிம் முதலிலேயே வருத்தம் தெரிவித்தார்.

துவக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய், ஷிகர் தவன் இருவரும் நம்பிக்கையான துவக்கத்தைத் தந்தனர். குறிப்பாக ஷிகர் தவன், ஒரு நாள் போட்டியைப் போலவே ரன் சேர்ப்பில் ஈடுபட்டார். மறுமுனையில் விஜய், டெஸ்ட் போட்டிக்கே உரிதான நிதானத்துடன் ஆடினார்.

11 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களைக் கடந்தது. ஷிகர் தவன் 47 பந்துகளில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து சீரான வேகத்தில் ரன் குவித்து வந்த இந்திய அணியின் ஆட்டம் 24-வது ஓவரில் மழையால் தடைபட்டது.

மழை தொடர்வதால் தற்போது உணவு இடைவேளையும் எடுக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவன் 74 ரன்களுடனும், முரளி விஜய் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

SCROLL FOR NEXT