நார்வே செஸ் தொடரின் 8-வது சுற்றுப் போட்டியில் நார்வே வீரர் லுத்விக் ஹாமர் என்பவரை இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தி 5.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்துக்கான மோதலில் டோபலோவை சந்திக்கவிருக்கிறார்.
டோபலோவ், தனது 8-வது சுற்று ஆட்டத்தில் ஆனிஷ் கிரி என்பவரிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்ததால் 6 புள்ளிகளில் இருக்கிறார், ஆனந்த் 8-வது சுற்றில் ஹாமரை வீழ்த்தியதால் 5.5 புள்ளிகளுடன் இருக்கிறார். எனவே அடுத்ததாக நடைபெறும் டோபலோவ்-ஆனந்த் போட்டி சாம்பியன் பட்டத்துகான மோதலாக அமைகிறது. இந்த ஆட்டத்தில் கருப்புக் காய்களுடன் ஆனந்த் விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் டோபலோவ் டிராவுக்காக ஆடினாலே போதும், ஆனால் ஆனந்த் வெற்றிக்காக ஆடினால்தான் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும்.
ஹாமருக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக எந்தவித தொடக்கத்தையும் கையாளாத ஆனந்த் சாதாரணமாகவே தொடங்கினார். ஆனால் ஹாமர் தனது காய்களின் நிலைகளை அதிமதிபீடு செய்து சில பாய்ச்சல்களை மேற்கொண்டு அதில் தோல்வியடைந்தார். ஆனந்த் மிகவும் கூலாக அவரது மூவ்களை எதிர்கொண்டார்.
அந்த மூவ்களில் ஏதேனும் அச்சுறுத்தல் இருப்பதாகவே ஆனந்த் காட்டிக் கொள்ளவில்லை. அலட்டிக் கொள்ளாமல் ஆடினார். ஹாமர் தனது நிலைகளை அதிமதிப்பீடு செய்ததால் கடைசியில் பவர்களை இழந்து வெறும் ராஜா, குயின், யானை, 2 சிப்பாய்களுடன் இருந்தார். ஆனால் ஆனந்திடம் 5 சிப்பாய்கள், ஒரு குயின், ஒரு யானை இருந்தது.
37-வது மூவில் ஆனந்த் தனது குயினை, அவரது யானையைக் குறிவைத்து நகர்த்த ஹாமர் ஆட்டத்தைக் கைவிட்டார். ஆனந்த் வெற்றி பெற்றார்.
ஆனந்த்-டோபலோவ் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.