சர்வதேச கிரிக்கெட்டில் சுரேஷ் ரெய்னாவின் ஃபார்ம் அவ்வளவு சீராக இல்லாவிட்டாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது ஃபார்ம் சீரான முறையில் இருந்து வந்துள்ளது.
இன்று இரவு 8 மணிக்கு பிளே ஆப் சுற்றில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், குறிப்பாக ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகளில் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 3500க்கும் மேல் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை ரெய்னா தன் வசம் வைத்துள்ளார்.
அதிக ஐபிஎல் அரைசதங்கள், அதிக கேட்ச்கள், ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் 400க்கும் அதிகமான ரன்கள், அதிக சிக்சர்கள் பட்டியலில் 2-வது இடம் என்று ரெய்னா ஐபிஎல் ஜாம்பவனாகத் திகழ்கிறார்.
இந்த தொடரில் 2 அரைசதங்கள் மட்டுமே எடுத்துள்ளார் சுரேஷ் ரெய்னா, இரண்டு அரைசதங்களும் பெங்களூரு அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது. இரண்டு போட்டிகளிலும் அவர் ஆட்ட நாயகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டித் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 34 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார் ரெய்னா, இதனால் இறுதிக்குள் நுழைந்தது சென்னை.
2010-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டியில் மும்பைக்கு எதிராக 35 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
2011-ம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றில் பெங்களூரு அணிக்கு எதிராக 50 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத்திகழ்ந்தார்.
2012 இறுதிப் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக 38 பந்துகளில் 73 ரன்கள் விளாசித்தள்ளினார்.
2013 இறுதிப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 42 பந்துகளில் 82 நாட் அவுட் என்று விளாசினார்.
கடந்த 2014 தொடரில் மும்பைக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 33 பந்துகளில் 54 ரன்களை எடுத்த சுரேஷ் ரெய்னா, பஞ்சாபுக்கு எதிராக 25 பந்துகளில் 87 ரன்கள் விளாசி ஏறக்குறைய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் மிகப்பெரிய இலக்கை துரத்தி வெற்றி பெறச் செய்யும் அளவுக்குச் சென்றார். ஆனால் முடியவில்லை.
இந்தப் போட்டியில்தான் பஞ்சாபின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பர்வீந்தர் அவானாவின் ஒரே ஓவரில் 33 ரன்கள் விளாசியதும் அப்போதுதான்.
எனவே பிளே ஆஃப் சுற்றில் ரெய்னா ஒரு அபாய வீரர். இன்று மும்பை இந்தியன்ஸ் இவரை கட்டுப்படுத்த நிச்சயம் உத்திகளை வகுத்திருக்கும்.