மந்தமாக இருந்து வரும் ஐபிஎல். கிரிக்கெட் விளம்பர வருவாய் கடைசி 4 போட்டிகளில் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான ஊழல் புகார்களுக்குப் பிறகே ஐபிஎல். கிரிக்கெட்டின் மீதான உற்சாகம் குறைந்து வருவதாகவே நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் விளம்பர வருவாயும் மந்தமாகவே இருந்து வந்தது.
தற்போது போட்டிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு அருகில் வந்துள்ளதால் கடைசி 4 போட்டிகளுக்கு விளம்பரம் மற்றும் ஸ்பான்சரக்ள் செய்வதற்கு சில நிறுவனங்கள் முன் வந்துள்ளது.
கடைசி 4 போட்டிகளுக்கான விளம்பரக் கட்டணத்தை செட் மேக்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் 4 மடங்கு அதிகரித்துள்ளது. 10 வினாடிகளுக்கான விளம்பரத்திற்கு ரூ.20 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மல்டி ஸ்க்ரீன் மீடியா (செட் மேக்ஸ் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள்) தலைவர் ரோகித் குப்தா கூறுகையில், "கடைசி 4 போட்டிகளுக்கு 10 வினாடிகளுக்கான விளம்பரங்களுக்கு ரூ.20 லட்சம் கட்டணம் நிர்ணயித்துள்ளோம். சராசரிப் போட்டிகளை விட கடைசி போட்டிகளுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம் இருக்கும்" என்றார்.
இதுவரை காத்ரெஜ் குழுமம், பானாசோனிக் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் விளம்பரங்கள் அளித்து வருகின்றன. ஆனால் கடைசி 4 போட்டிகளுக்கு விளம்பரம் அளிக்க முன்வந்துள்ள நிறுவனங்கள் பற்றி ரோகித் குப்தா எதுவும் தெரிவிக்கவில்லை.
துவக்க போட்டிகளுக்கு கார்பன் மொபைல், பார்லே, அமுல், ஹேவெல்ஸ், 10 வினாடிகளுக்கான விளம்பரங்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்துள்ளனர்.
இந்த முறை ஐபிஎல் போட்டிகளைத் தொலைக்காட்சியில் காணுவோர் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளதும் விளம்பர நிறுவனங்களின் ஆர்வமின்மைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 7 முதல் 8 சதவீதம் ரேட்டிங் சரிவு கண்டுள்ளதாக மீடியா நோக்கர்கள் கூறியுள்ளனர்.
வீழ்ந்து வரும் டிஆர்பி ரேட்டிங்கிற்கும் விளம்பரக் கட்டணங்களுக்கும் இடைவெளி அதிகமிருப்பதாக விளம்பர நிறுவனங்கள் கருதுகின்றன. தற்போது டி.ஆர்.பி ரேட்டிங் 3-ற்கும் 4-ற்கும் இடையே உள்ளது.