விளையாட்டு

10 ஓவர் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு

செய்திப்பிரிவு

பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

மழை காரணமாக தாமதமாகத் தொடங்கிய இந்த ஆட்டம் அணிக்கு 10 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 9.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆர்.சி.பி. அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது 2 ஓவர்களில் 6 டாட் பால்களுடன் 1 பவுண்டரி மட்டுமே கொடுத்து 15 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ராபின் உத்தப்பா (23 ரன்கள், 21 பந்துகள் 3 பவுண்டரி), கம்பீர் (12 ரன், 8 பந்து 2 பவுண்டரி) 23 பந்துகளில் 33 ரன்கள் என்ற தொடக்கத்தை கொடுத்தனர். முதலில் கம்பீர் வெளியேறினார். மந்தீப் சிங் பிடித்த அற்புதமான பாயிண்ட் திசை கேட்சுக்கு வீஸவிடம் விக்கெட்டைக் கொடுத்து வெளியேறினார்.

அதன் பிறகு உத்தப்பா, ஆந்த்ரே ரசல் ஜோடி 3 ஓவர்களில் 38 ரன்கள் விளாசினர். அப்போது சாஹல் பந்தில் உத்தப்பா வெளியேறினார்.

ஆனால் ஆந்த்ரே ரசல் அசத்தினார். வருண் ஆரோன் வீசிய 6-வது ஓவரில் ரஸல் விருந்து படைத்தார். ஷார்ட் பிட்ச் பந்து ஒன்றை உடைந்து விடும் அளவுக்கு விளாசினார் பந்து மிட்விக்கெட் ஸ்டாண்டில் போய் விழுந்தது.

அடுத்த 2 பந்துகள் ஸ்லோ பந்துகள் ரன் இல்லை. ஆனால் 5-வது பந்தை ,மிட்விக்கெட்டுக்குச் செல்லுமாறு சுழற்றினார் ரஸல், ஆனால் வருணின் வேகம் ரசல் மட்டையின் அடர்த்தியான விளிம்பு ஆகியவற்றினால் பந்து எட்ஜ் எடுத்து தேர்ட்மேனில் பவுண்டரி ஆனது. அடுத்த பந்து பவுலர் தலைக்கு மேல் சிக்ஸ். அந்த ஓவரில் 17 ரன்கள் விளாசினார் ரஸல். பிறகு சாஹல் ஓவரில் 2 பவுண்டரிகள், பிறகு வீஸ பந்தில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர்.

17 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுத்த ரசல் 9-வது ஓவரில் பை ரன் ஒன்றை எடுக்க ரன்னர் முனையிலிருந்து ஓடி வந்து கார்த்திக்கின் த்ரோவில் ரன் அவுட் ஆனார். டென் டஸ்சதே 6 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 12 ரன்கள் எடுத்து கடைசி ஒவரின் முதல் பந்தில் வெளியேறினார்.

யூசுப் பத்தான் 11 ரன்கள் எடுக்க கொல்கத்தா 111/4 என்று முடிந்தது.

மந்தீப் சிங்கின் கடைசி நேர அதிரடியில் பெங்களூரு வெற்றி:

10 ஓவர்களில் 112 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கினர் கெய்ல், கோலி ஜோடி. முதல் ஓவரை பேட் கமின்ஸ் நன்றாக வீசி 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

2-வது ஓவரில் கோலி, உமேஷ் யாதவ்வை எதிர்கொண்டார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆன லெந்த் பந்தை நேராக சிக்சர் அடித்த்தார். அடுத்த ஷார்ட் பிட்ச் பந்தை புல் செய்ய அது பவுண்டரிக்குப் பறந்தது. கடைசி பந்தில் கெய்ல் ஸ்ட்ரைக்கு வர லாங் ஆஃப் ஸ்டாண்டுக்கு சிக்சர் தூக்கினார்.18 ரன்களை விட்டுக் கொடுத்தார் உமேஷ் யாதவ்.

அடுத்த ஓவரை கமின்ஸ் வீச புல்டாஸில் பவுண்டரி அடித்த கோலி, அடுத்த பந்தில் லெக் திசையில் ஒதுங்கிக் கொண்டு லாங் ஆனில் ஒரு அருமையான சிக்சரை விளாசினார்.

3 ஓவர்கள் முடிவில் 36 ரன்கள் வர, பிராட் ஹாக் பந்து வீச அழைக்கப்பட்டார். அவரை கெய்ல் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்சரும், டீப் மிட்விக்கெட்டில் இன்னொரு காட்டடி சிக்சரும் விளாசி, அதே ஓவரில் ஹாகிடம், ஆந்த்ரே ரசலின் அற்புதமான கேட்சுக்கு 9 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 21 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.

4-வது ஓவரில் டிவில்லியர்ஸ் விக்கெட்டை சாவ்லா வீழ்த்தினார். சற்றே வெளியே சென்ற பந்தை டிவில்லியர்ஸ் கட் செய்ய முயல பந்து அடிவிளிம்பில் பட்டு பவுல்டு ஆனார்.

பெங்களூரு அணி 5 ஒவர்களில் 52/2 கோலி 25 ரன்களுடன் இருக்க, மன்தீப் சிங் களம் கண்டார். ஹாக் பந்தை சிக்சர் அடித்து மன் தீப் சிங் தன் அதிரடியைத் தொடங்கினார்.

பிறகு சாவ்லா ஓவரில் மன்தீப் சிங் 2 பவுண்டரிகளை அடிக்க கோலி லாங் ஆனில் சிக்சர் அடித்தார். 7-வது ஓவரில் 80/2.

ரஸல் 8-வது ஓவரை வீச வந்தார். கோலி லாங் ஆனில் கேட்ச் கொடுத்து 34 ரன்களில் (20 பந்துகள் 2 பவுண்டரி 3 சிக்சர்) வெளியேறினார்.

8-வது ஓவர் முடிவில் ஸ்கோர் 87/3. தேவை 2 ஓவர்களில் 25 ரன்கள்.

9-வது ஓவரை உமேஷ் யாதவ் வீச யார்க்கர் நன்றாக விழ முதல் 4 பந்துகளில் 5 ரன்களே வந்தது. ஆனால் 5-வது பந்தை மந்தீப் சிங் அபாரமாக ஸ்கூப் செய்து பின்னால் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்து அதிர்ஷ்ட எட்ஜ், தேர்ட்மேனில் பவுண்டரி சென்றது. 13 ரன்கள் இந்த ஓவரில் வர 100/3 என்று இருந்தது.

ரஸல் கடைசி ஓவரை வீச மந்தீப் சிங் பாயிண்ட் திசையில் அற்புதமான ஒரு சிக்சரையும், பிறகு ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் இன்னொரு சிக்சரையும் அடிக்க 2 பந்துகள் மீதமிருக்கையில் பெங்களூரு வென்றது.

இந்த வெற்றியின் மூலம் 8 போட்டிகளில் 4 வெற்றி 3 தோல்விகளுடன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 9 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கொல்கத்தா 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆட்ட நாயகனாக மந்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் உண்மையில் ஆந்த்ரே ரஸலின் ஆல் ரவுண்ட் திறமைக்காக அவரே ஆட்ட நாயகன் விருதுக்கு உரியவர்.

SCROLL FOR NEXT