லாகூரில் புதனன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 375 ரன்கள் குவித்த பாகிஸ்தான், ஜிம்பாப்வேயை 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி மட்டை ஆட்டக்களத்தில் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். பாகிஸ்தான் மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களான 375 ரன்களை வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து எடுக்க, தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது.
அதாவது பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்த 2-வது அதிகபட்ச ரன் எண்ணிக்கையாகும் இது. பாகிஸ்தானின் அதிகபட்ச ரன் எண்ணிக்கை 385 என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் நேற்று ஹபீஸ் (89), அசார் அலி (79), ஷோயப் மாலிக் (112), ஹாரிஸ் சோஹைல் (89) ஆகியோர் 70க்கும் மேல் ஒருநாள் போட்டி ஒன்றில் எடுத்த வகையில் சாதனை நிகழ்த்தினர். அதாவது ஒருநாள் போட்டி வரலாற்றில் முதல் 4 வீரர்கள் 70+ ஸ்கோர்களை அடித்ததில்லை.
மட்டை ஆட்டக்களத்தில் பன்யாங்கரா, விட்டோரி, மபஃபூ, சான் வில்லியம்ஸ், உத்சேயா, சிகந்தர் ரசா ஆகிய ஜிம்பாப்பே பந்து வீச்சாளர்கள் படு சாதாரணமாக வீசினர்.
பாகிஸ்தான் மட்டையாளர்கள் எந்த விதமான ஆக்ரோஷமான ஷாட்டையுமே விளையாடாமல், கோபமே படாமல் பதட்டமடையாமல் இந்த பெரிய இலக்கை எட்டியுள்ளனர்.
அசார் அலி, மொகமது ஹபீஸ் தொடக்க விக்கெட்டுக்காக 179 ரன்களைச் சேர்த்தனர். உள்நாட்டில் பாகிஸ்தானின் 3-வது சிறந்த ஒருநாள் தொடக்க ஜோடி ரன்களாகும் இது.
சதம் எடுப்பார்கள் என்று நினைத்த போது, 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 83 பந்துகளில் 86 ரன்கள் எடுத்த ஹபீஸ், பிறகு 76 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 76 ரன்கள் எடுத்த அசார் அலி ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
ஷோயப் மாலிக் அதிரடி சதம்:
கடந்த 5 ஆண்டுகள் கிரிக்கெட்டில் அவர் 43 ரன்களைத் தாண்டியதில்லை. ஆனால் நேற்று 76 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 112 ரன்கள் விளாசினார்.
மாலிக், ஹாரிஸ் சோஹைல் கூட்டணியில் சற்றே நிதானமாக தொடங்கியவர் மாலிக், ஆனால் 33-வது ஓவரில் சிகந்தர் ரசாவின் பந்தை அவர் மேலேறி வந்து சிக்சருக்குத் தூக்கியவுடன் ஆக்ரோஷத்தை கூட்டினார்.
பவர் பிளேயில் 41 ரன்கள் எடுக்கப்பட்டது. 40வது ஓவரில் ஸ்கோர் 263/2 என்று இருந்தது. ஜிம்பாப்வே பவுலர்கள் மட்டை ஆட்டக்களத்தில் பரிதாபமாக முடிந்தனர். யார்க்கர்கள் விழவில்லை. பீல்டிங் படுமோசம். இதனால் கடைசி 10 ஓவர்களில் 112 ரன்கள் வந்தது.
49-வது ஓவரில் ஷோயப் மாலிக் சதம் கண்டார். ஹாரிஸ் சோஹைல் 66 பந்துகளில் 89 ரன்கள் விளாச பாகிஸ்தான் 375 ரன்களை குவித்தது.
எல்டன் சிகும்பராவின் சுவாரசியம் ஏற்படுத்திய சதம்:
இலக்கைத் துரத்த களமிறங்கிய ஜிம்பாப்வே அனவர் அலி, மொகமட் சமியின் மோசமான பந்து வீச்சை நன்றாகப் பயன்படுத்தினர். சிபந்தா, சிகந்தர் ஜோடி 10-வது ஓவரில் 56 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் இருவரும் அவுட் ஆக 13-வது ஓவரில் ஸ்கோர் 65 ஆக இருந்தது.
அதன் பிறகு ஜோடி சேர்ந்த மசகாட்சா (73 ரன்கள் 73 பந்துகள் 4 பவுண்டரி 2 சிக்சர்), சிகும்பரா ஜோடி 19.5 ஒவர்களில் 124 ரன்களை விரைவில் சேர்த்தனர்.
33-வது ஓவர் முடிவில் தேவைப்படும் ரன் 186 ரன்களாக இருந்தது. அதாவது 17 ஓவர்களில் 186 ரன்கள் தேவை. அதன் பிறகு சிகும்பரா சிறப்பாக ஆடினார். ஆனால் இவர் ஒரு முறை எல்.பி.யிலிருந்து தப்பித்தும், 2 கேட்ச்கள் விடப்பட்டதினால் 2 முறை மறுவாழ்வும் பெற்றார். மொகமட் சமியை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்த சிகும்பரா, பிறகு இன்னொரு ஓவரில் 22 ரன்கள் விளாசி விரட்டலின் சுவாரசியம் கூட்டினார். 95 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 பவுண்டரிகளுடன் 117 ரன்களை எடுத்து வஹாப் ரியாஸ் யார்க்கரில் பவுல்டு ஆகி வெளியேறினார்.
சான் வில்லியம்ஸ் 36 ரன்களைச் சேர்த்தார். ஆனால் சிகும்பராவுடன் இணைந்து இருவரும் 10 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்தனர். சிகும்பரா அவுட் ஆகும் போது ஸ்கோர் 44.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசியில் முடும்பமி 21 ரன்களையும், உத்சேயா 21 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாக இருந்தனர். 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் என்று ஜிம்பாப்வே முடிந்தது. வஹாப் ரியாஸ் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
வஹாப் ரியாஸ் தவிர மற்றவர்கள் சரியாக வீசாத நிலையில் 375 ரன்களை எடுக்கவில்லையெனில் பாகிஸ்தான் தோல்வி தழுவியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதனால்தான் விரட்டலில் ஜிம்பாப்வே மிரட்டியது.
ஷோயப் மாலிக் ஆட்டநாயகன் விருது பெற, 3 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என்று முன்னிலை பெற்றது.