விளையாட்டு

பவர் பிளேயில் ரன் குவிக்க திட்டமிட்டிருந்தோம் - சாஹா

செய்திப்பிரிவு

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பவர் பிளேயில் அதிவேகமாக ரன் சேர்க்க திட்டமிட்டிருந்தோம் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா தெரிவித்துள்ளார்.

மொஹாலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பஞ்சாப்-பெங்களூர் இடையிலான ஆட்டம் மழை காரணமாக 10 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் குவித்தது. இதில் சாஹா 12 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் குவித்தார்.

பின்னர் ஆடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதனால் பெங்களூர் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறு வதற்கு அடுத்த இரு ஆட்டங்களில் வென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

போட்டி முடிந்த பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய விருத்தி மான் சாஹா மேலும் கூறிய தாவது: மொஹாலி மைதானம் பேட்டிங்கிற்கு ஏற்ற ஆடுகள மாகும். மழை காரணமாக போட்டி 10 ஓவர்களாகக் குறைக் கப்பட்டதால் 3 ஓவர்கள் மட்டுமே பவர் பிளே ஆகும். அதனால் அந்த 3 ஓவர்களில் அதிக அளவில் ரன் குவிக்கத் திட்டமிட்டிருந்தோம். மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், ஜார்ஜ் பெய்லி போன்றவர்கள் எங்கள் அணியில் இருப்பதால் பவர் பிளேயில் முடிந்த அளவுக்கு ரன் குவிக்க இலக்கு நிர்ணயித்திருந்தோம். பவர் பிளேயில் வேகமாக ரன் சேர்த்ததால்தான் நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது என்றார்.

உங்களை தொடக்க வீரராக களமிறக்குவதற்கு எப்போது முடிவெடுக்கப்பட்டது என சாஹா விடம் கேட்டபோது, “முந்தைய ஆட்டத்தில் முரளி விஜய் விளையாடாதபோதே என்னை தொடக்க வீரராக களமிறக்குவது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் போட்டி 10 ஓவர்களாகக் குறைக்கப்பட்டபோது நான் தொடக்க வீரராக களமிறங்குவதா, வேண்டாமா என சிந்தித்தேன். ஆனால் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரோ, நான்தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என என்னிடம் கூறினார்” என்றார்.

தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் தோற்ற பஞ்சாப், பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் வென்றதன் மூலம் தொடர் தோல்வியிலிருந்து மீண்டுள்ளது. அது தொடர்பாக பேசிய சாஹா, “தோல்விப் பாதையில் இருந்து மீண்டிருப்பது நல்லது. கடைசிப் போட்டியிலும் வென்று இந்த சீசனை வெற்றியோடு முடிக்க நினைத்துள்ளோம். கடைசிப் போட்டியின் மீது மட்டும்தான் எனது கவனம் உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT