விளையாட்டு

பயிற்சிக்காக மாதம் ரூ.18,000 செலுத்தும் அவல நிலையில் கேதர் ஜாதவ்!

செய்திப்பிரிவு

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட, டெல்லி டேர் டெவில்ஸ் வீரர் கேதர் ஜாதவ், பயிற்சி செய்ய மாதம் ரூ.18,000 கட்டணம் செலுத்தும் அவலத்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் ஒரு ஆக்ரோஷமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பேட்டிங் திறமைகளுக்கு ஒருவழியாக அங்கீகாரம் கிடைக்க அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய அணியில் இடம்பெறும் அளவுக்குத் திறமை உள்ள ஒரு வீரருக்கு அவரது மாநிலத்தில் பயிற்சி செய்ய வசதி இல்லை. மாதம் ரூ.18,000 கட்டணம் செலுத்தி அவர் பயிற்சி செய்து வருவதை அவர் வேதனையுடன் கூறியதாவது:

"நான் கடந்த 14 ஆண்டுகளாக புனேயின் டெக்கான் ஜிம்கானா கிளப் அணியை பிரதிநிதித்துவம் செய்து வருகிறேன், ஆனாலும் எனக்கு வலைப்பயிற்சி செய்ய போதிய வசதிகள் செய்து தரப்படுவதில்லை.

இன்று இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளேன், இந்தியா ஏ அணிக்கு விளையாடியுள்ளேன், ஐபிஎல் அணியில் ஆடி வருகிறேன், இந்த கிளப்பிலிருந்து நான் இவ்வளவு தூரம் வளர்ந்து வந்தது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை போலும்.

நான் பயிற்சி செய்ய மாதம் ரூ.18,000 கட்டணம் செலுத்தி வருகிறேன், அதுவும் 22 யார்டு கிரிக்கெட் அகாடமியில். காரணம் அங்குதான் முறையான ஆடுகளம் உள்ளது. இந்தியாவுக்கு விளையாடும் எத்தனை வீரர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் இந்த அவல நிலையைச் சந்தித்து வருகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்று அவர் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் மோசமான வெளியேற்றத்திலும் ஓரளவுக்கு ஆடியவர் கேதர் ஜாதவ்வே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் டெல்லி அணியில் துவக்க ஆட்டங்களில் முன்னால் களமிறங்க தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்கிறார் அவர்.

இது குறித்து சற்று கிண்டலுடன் அவர் தெரிவிக்கையில், "உங்கள் மார்பில் எந்த லோகோ உள்ளது என்பதைப் பொறுத்து டவுன் ஆர்டர் மாறும். இந்தியா லோகோ இருந்தால் உங்களை அணியில் சீரியசாக எடுத்துக் கொள்வார்கள். இப்போது இந்திய அணியில் தேர்வாகிவிட்டேன், இனி என்னை சற்று முன்னால் களமிறக்குவார்கள் என்று நம்புகிறேன்" என்றார் அவர்.

மேலும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர் கூறியதாவது:

இந்தியாவுக்காக ஒருநாள் ஆடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எனது உடனடி இலக்கு சிறப்பாக ஆடி இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடிப்பதே. இந்தியாவுக்கு விளையாடுவதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று நாட்டுக்காக ஆடுவது, மற்றொன்று நாட்டுக்காக நீண்ட காலம் ஆடுவது. நான் இந்திய அணியில் நீண்ட நாள் விளையாட விரும்புவன்.

வான்கடே மைதானத்தில் மும்பைக்கு எதிராக ரஞ்சி காலிறுதிப் போட்டியை வெற்றி பெறச்செய்த சதம் எனக்கு முக்கியமானது. மும்பை அணியை அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்த எனது சதம் பங்களிப்பு செய்தது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் ஒரு ஆண்டுக்கு முன்பாக உத்திரப்பிரதேச அணிக்கு எதிராக ரஞ்சிப் போட்டியில் 317 பந்துகளில் 327 ரன்கள் எடுத்ததும் எனது வாழ்நாளில் முக்கியமான இன்னிங்ஸ் ஆகும்.

இவ்வாறு கூறிய கேதர் ஜாதவ் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 1223 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT