இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2017-ம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் 6 மைதானங்களில் நடைபெறவுள்ளதாக போட்டி ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.
அந்த 6 மைதானங்களில் நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, கவுகாத்தி, கொல்கத்தா, கொச்சி ஆகிய 4 மைதானங்கள் தற்காலிகமாக இறுதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் இரு மைதானங்கள் அடுத்த சில மாதங்களில் இறுதி செய்யப்படவுள்ளன. கோவா, சென்னை, டெல்லி, பெங்களூரு, புனே ஆகிய 5 நகரங்களில் இருந்து இரு மைதானங்கள் இறுதி செய்யப்படவுள்ளன.
23 நாட்கள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இந்தப் போட்டியில் இந்தியா உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கின்றன.
இது தொடர்பாக போட்டி இயக்குநர் ஜேவியர் செபி கூறுகையில், “உள்ளூர் போட்டி ஏற்பாட்டுக் குழுவுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினோம். முதல்முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா நடத்துகிறது. இந்தப் போட்டி நடைபெறும் நேரத்தில் இங்கு ஐஎஸ்எல் போட்டியும் நடைபெறும்.
ஆனால் அதற்காக உலகக் கோப்பை போட்டியை மாற்ற முடியாது. ஏனெனில் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஐரோப்பிய தகுதிச் சுற்று 2016 மே மாதத்தில்தான் முடிவடையும்.
உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியாவது இருக்க வேண்டும். அதனால் செப்டம்பருக்கு முன்னதாக போட்டியை நடத்த முடியாது” என்றார்.