ஓவல் மைதானத்தில் லீசெஸ்டர் அணிக்கு எதிராக சர்ரே அணிக்கு ஆடிய பீட்டர்சன் 326 ரன்கள் குவித்தார். ஆனால் இங்கிலாந்து அணியில் மீண்டும் வாய்ப்பு தரப்படமாட்டாது என்று அவரிடம் அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய இயக்குநராக முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, நீக்கப்பட்ட கெவின் பீட்டர்சன் மீண்டும் இங்கிலாந்து அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கெவின் பீட்டர்சனும், தனது ஐபிஎல் வாய்ப்பை விடுத்து இங்கிலாந்து சர்ரே அணிக்காக விளையாடி நேற்று 2-ம் நாள் ஆட்ட முடிவில் 326 ரன்கள் குவித்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். அவர் அடிக்கும் முதல் முச்சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இன்னிங்ஸிற்குப் பிறகு பீட்டர்சன், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸை சந்தித்ததாகவும், அப்போது அவரிடம் இங்கிலாந்து அணியில் வாய்ப்பு இனி இல்லை என்று கூறப்பட்டதாகவும் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
373 பந்துகளைச் சந்தித்த பீட்டர்சன் அதில் 34 பவுண்டரிகளையும், 14 சிக்சர்களையும் விளாசித் தள்ளினார். ஒரே நாளில் 35 நாட் அவுட்டிலிருந்து 326 ரன்களை விளாசி தன்னை நிரூபித்தார் கெவின் பீட்டர்சன்.
தனது இன்னிங்ஸ் குறித்து கூறிய பீட்டர்சன், “தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கும், இங்கிலாந்து அணியிடமிருந்து ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது, ரசிகர்கள் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதை விரும்புகின்றனர்” என்றார்.
2014 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 0-5 என்று உதை வாங்கிய பிறகு கெவின் பீட்டர்சன் பலிகடாவாக்கப்பட்டு அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
2012-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அப்போதைய இங்கிலாந்து கேப்டன் ஸ்ட்ராஸ் பற்றி எஸ்.எம்.எஸ். அனுப்பி சர்ச்சையில் சிக்கினார் பீட்டர்சன். இதனையடுத்து ஒழுங்கு நடவடிக்கையாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதன் பிறகு ஸ்ட்ராஸ் தொலைக்காட்சி வர்ணனையின் போது பீட்டர்சன் பற்றி படுமோசமான கருத்து ஒன்றைக் கூறினார். அது அனைவருக்கும் தெரிய, ஸ்ட்ராஸ் பிறகு மன்னிப்பு கேட்டார்.
தற்போது 326 ரன்கள் விளாசி தனது திறமையையும் நோக்கத்தையும் கெவின் பீட்டர்சன் நிரூபித்தும் அவருக்கு இங்கிலாந்து வாய்ப்பு இனி இல்லை என்ற செய்திகளை அடுத்து ட்விட்டரில் வீரர்கள், வரணனையாளர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்:
ஹர்ஷா போக்ளே: "வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுவது பலசமயங்களில் ஈகோதான்" என்று பதிவிட்டுள்ளார்.
ஷேன் வார்ன்: கெவின் பீட்டர்சன் இனி இங்கிலாந்துக்கு ஆட முடியாது என்பது உண்மையா? மூர்ஸ் கையாண்ட விதம் பயங்கரமானது, இங்கிலாந்து கிரிக்கேட் தலைகள் நிறைய யோசிக்க வேண்டியுள்ளது.
ஜெஃப் பாய்காட்: மிகச்சிறந்த இன்னிங்ஸிற்கு வாழ்த்துக்கள். ஸ்ட்ராஸ் மற்றும் டாம் ஹாரிசனால் கெட்டுப் போய்விட்டது. தொடர்ந்து ரன்களைக்குவியுங்கள்.
அலெக்ஸ் டியூடர் (முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்): ஒரு விஷயம் எனக்கு உறுதியாகத் தெரிகிறது. ஆஸ்திரேலியர்கள் இப்போது சிரித்து மகிழ்வது இதற்காகத்தானோ...
டேரன் காஃப்: இங்கிலாந்து சிறந்த அணியைத் தேர்வு செய்வது அவசியம். இதில் வயதையோம், ஆளுமையையோ பார்க்கக் கூடாது. சரியான வீரரைத் தேர்வு செய்ய வேண்டும்.
மைக்கேல் வான்: அவரைப்பற்றி என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளுங்கள் அது பற்றி கவலையில்லை, அவரால் இன்னும் சிறப்பாக விளையாட முடிகிறதே...
ஆண்ட்ரூ பிளிண்டாஃப்: ஸ்ட்ராஸின் தைரியமான முடிவை மதிக்கிறேன். ஆனால், அவர் மோசமான முடிவை எடுத்துள்ளார். காரணங்கள் கூற முடியுமா?