முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வேகப்பந்துவீச்சு குறித்த ஆலோசனைகளை வழங்கி யுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும், கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான வாசிம் அக்ரம்.
மும்பை அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் விளையாடு வதற்காக கொல்கத்தா அணி நேற்று முன்தினம் மும்பை வந்தது. வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த பயிற்சியின் போது வாசிம் அக்ரமை சந்தித்தார் அர்ஜுன் டெண்டுல்கர்.
அப்போது அவருக்கு வேகப் பந்து வீச்சு தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய அக்ரம், அது தொடர்பாக செய்தி யாளர்களிடம் பேசியதாவது:
கடந்த கோடைக்காலத்தின் போது இங்கிலாந்து வந்திருந்த அர்ஜுனை சந்தித்தேன். நாங்கள் அங்கு காட்சிப் போட்டியில் ஆடினோம். நான் மிட் ஆன் திசையில் பீல்டிங் செய்தபோது, அர்ஜுன் பந்துவீசினார். அவரு டைய பந்துவீச்சில் பிரையன் லாரா ஆட்டமிழந்தார்.
அர்ஜுனுக்கு 15 வயதுதான் ஆகிறது. இடது கை மித வேகப்பந்து வீச்சாளரான அவர், பந்துவீச்சின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். அவரிடம் ஸ்விங் பந்துவீச்சு உள்ளிட்ட விஷயங்களை பற்றி பேசினேன்” என்றார்.