இஸ்தான்புல் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் தரவரிசை அடிப்படையில் நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆடும் வாய்ப்பைப் பெற்ற ஃபெடரர், அதில் 6-2, 7-5 என்ற நேர் செட்களில் ஃபின்லாந்தின் ஜார்க்கோ நிமினியனை தோற்கடித்தார். களிமண் ஆடுகளத்தில் ஃபெடரர் பெற்ற 200-வது வெற்றி இதுவாகும்.
முதல்முறையாக நடைபெறும் இஸ்தான்புல் ஓபனில் வெற்றியோடு தொடங்கியுள்ள ஃபெடரர் அது தொடர்பாக மேலும் கூறியதாவது: துருக்கி மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 2-வது செட்டில் ஜார்க்கோ சிறப்பாக ஆடினாலும் இறுதியில் அவரை வீழ்த்திவிட்டேன்” என்றார்.
தற்போது விளையாடி வரும் வீரர்களில் களிமண் ஆடுகளத்தில் 200 ஆட்டங்களில் வெற்றி பெற்ற 7-வது வீரர் ஃபெடரர் ஆவார். இதுதவிர ஹார்ட் கோர்ட் மற்றும் களிமண் ஆடுகளம் என இரண்டிலும் தலா 200 வெற்றிகளைப் பதிவு செய்த 4-வது வீரர் ஃபெடரர். ரஃபேல் நடால், டேவிட் ஃபெரர், டாமி ராபர்ட்டோ ஆகியோர் மற்ற 3 வீரர்கள் ஆவர்.