ஜிம்பாப்பேவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் நேற்று முன்தினம் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், ஜிம்பாப்வேயை முதலில் பேட் செய்ய அழைத்தது. அந்த அணியின் சிக்கந்தர் ராஸா ஆட்டமிழக்காமல் 100 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் சிபான்டா 99 ரன்களும் எடுக்க, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் சேர்த்தது.
பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ், யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் அசார் அலி 102 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஆசாத் ஷபிக் 39 ரன்களில் வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஹாரிஸ் சோஹைல்-ஷோயிப் மாலிக் ஜோடி சிறப்பாக ஆட, 47.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது பாகிஸ்தான்.
ஹாரிஸ் சோஹைல் 49 பந்து களில் 52 ரன்களும், ஷோயிப் மாலிக் 20 பந்துகளில் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அசார் அலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஏற்கெனவே முதல் போட்டியில் வென்றிருந்த பாகிஸ்தான், இந்தப் போட்டியிலும் வென்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை கைப்பற்றியுள்ளது.