மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 147 ரன்களைக் குவித்து, விராட் கோலியுடன் சேர்ந்து முக்கியமான ரன்களை எடுத்த அஜிங்கிய ரஹானே, மிட்செல் ஜான்சனை எதிர்கொண்டது பற்றி பேசியுள்ளார்.
ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியதாவது:
“ஓய்வறையில் எனது மனநிலை ஏற்கெனவே ஆக்ரோஷமாகவே இருந்தது. பேட்டிங் செய்ய இறங்கும் முன்னரே ஜான்சன் எந்த இடத்தில் வீசுவார் அப்படி வீசினால் எங்கெல்லாம் அவரது பந்துகளை அடித்து ஆட முடியும் என்பதை முன்கூட்டியே கண் முன்னே கொண்டு வந்து பழகினேன்.
விராட் கோலியுடன் எனது ஆலோசனைகளும் அந்த கோணத்திலேயே இருந்தன: அதாவது ஆஸ்திரேலிய வீர்ர்கள் எங்களுக்கு எதிராக ஆக்ரோஷம் காட்ட வாய்ப்பையே அளிக்கக் கூடாது என்று முடிவெடுத்தோம். மாறாக ஆக்ரோஷ ஆட்டத்தை அவர்களுக்குக் எதிராக எடுத்துச் செல்வது என்று முடிவெடுத்தோம்.
ஒரு நேரத்தில் விராட் கோலியிடம் நான் கூறினேன், ‘நான் இனிமேல் தாக்குதல் ஆட்டம் ஆடப்போகிறேன், ஜான்சன் பவுன்சர் வீசினாலும் நாம் அவரை அடித்து ஆடுவதே சிறந்தது என்றும் காத்திருக்க வேண்டாம்’ என்றும் கூறினேன், வேகமாக ரன்களை எடுப்பது முக்கியம், ஏனெனில் நாங்கள் இங்கு டெஸ்ட் போட்டியை டிரா செய்ய வரவில்லை. வெற்றி பெற வந்திருக்கிறோம் என்ற செய்தியை பேட்டிங் மூலம் அவர்களுக்கு அறிவுறுத்துவதே எங்களது விருப்பம்.
விராட் (கோலி) உடன் அன்று ஜோடி சேர்ந்து ஆடிய இன்னிங்ச் என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவமாகும்.
லார்ட்ஸில் பசுந்தரை பிட்சில் அடித்த சதம் பற்றி...
அந்த லார்ட்ஸ் பிட்ச் மிகவும் சவாலான ஒன்று. தொடக்கத்தில் உடலுக்கு நெருக்கமாக மட்டையை வைத்து ஆடி வெளியே செல்லும் பந்துகளை தொடக்கூடாது என்று முடிவெடுத்தேன்.
தேநீர் இடைவேளையின் போது 140/7 என்று இருந்த போது இந்த பிட்சில் ரன்கள் என்பது மிக முக்கியம் என்று தெரிந்தது. எனவே ஷாட்களை ஆட தீர்மானித்தேன்.
புவனேஷ் குமாரிடம், நான் எனது ஷாட்களை ஆடப்போகிறேன் என்றேன், அவரிடம் ஸ்ட்ரைக்கை சுழற்சியில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தினேன். நான் ஆண்டர்சன் பந்து வீச்சை அடித்து ஆட முடிவெடுத்தேன், ஏனெனில் அந்தப் பிட்சில் 300 ரன்கள் இருந்தால் அது வெற்றி ரன் எண்ணிக்கையாகும். 295 ரன்களை எடுத்தோம்.
நான் எடுத்த முடிவு பலனளிக்குமா என்பதெல்லாம் எனக்கு தெரியாது, ஆனால் எனது முடிவிலிருந்து பின்வாங்காமல் எடுத்த தீர்மானம் வெற்றிக்கு வித்திட்டது.
29 ரன்கள் எடுத்த பிறகே, இந்த பவுலர்களை அடித்து ஆடினால், அவர்கள் நிச்சயம் பின்னடைவு காண்பார்கள் என்று நினைத்தேன். புதிய பந்து எடுக்கப்பட்டது. எப்போதும் புதிய பந்தில் ரன்கள் எடுக்கும் வாய்ப்புகள் அதிகம். புவனேஷ் குமாரும் ஒரு முனையில் தான் ஊன்றிவிடுவதாக உறுதி அளித்தார். எனவே ஷாட்களை ஆடவேண்டும் என்று உணர்ந்ததால் ஆடிவிடுவேன்” என்றார் அஜிங்கியா ரஹானே.
இந்த நீண்ட பேட்டியில் ரஹானே, தனக்கு ஊக்கமளித்த சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், மற்றும் முக்கியமான உத்தி பழுதுகளில் ஆலோசனைகள் வழங்கிய பிரவீண் ஆம்ரே, டன்கன் பிளெட்சர் ஆகியோரின் பங்களிப்புகளையும் குறிப்பிட்டுள்ளார்.