விளையாட்டு

உலகக் கோப்பை ஹாக்கி இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

13-வது உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டி நெதர்லாந்து தலைநகர் தி ஹேக்கில் இன்று தொடங்குகிறது. 15-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியோடு சேர்த்து மகளிர் உலகக் கோப்பை போட்டியும் நடைபெறுகிறது. இதற்கு முன்னர் 1973, 1998-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியை நடத்திய நெதர்லாந்து, தற்போது 3-வது முறையாக நடத்துகிறது.

ஆடவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பெல் ஜியம், இந்தியா, ஸ்பெயின், மலேசியா ஆகிய அணிகளும், பி பிரிவில் ஜெர்மனி, நெதர் லாந்து, நியூஸிலாந்து, தென் கொரியா, ஆர்ஜென்டீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணி களும் இடம்பெற்றுள்ளன. ஒவ் வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, மலேசியாவையும், இந்தியா, பெல்ஜியத்தையும், இங்கிலாந்து, ஸ்பெயினையும் எதிர்கொள்கின்றன.

இந்தியா-பெல்ஜியம் இடையிலான ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியை இந்தியா எப்படி எதிர்கொள்கிறது என்பதைப் பொறுத்தே எஞ்சிய ஆட்டங்களில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அமையும். ஏ பிரிவில் இந்திய அணியுடன் இடம்பெற்றுள்ள எல்லா அணிகளுமே பலம் வாய்ந்தவையாகும்.

இந்திய அணி கடைசியாக 1975-ல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பிறகு ஏறக் குறைய கடந்த 40 ஆண்டுகளாக அரையிறுதிக்குகூட தகுதிபெறவில்லை. ஐரோப்பிய கோப்பை போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய பெல்ஜியம், கடந்த 3 ஆண்டுகளாக அபாரமாக ஆடி வருகிறது.

2011-ல் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற சாம்பியன்ஸ் சேலஞ்ச் கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பெல்ஜியம், இந்தியாவுடன் கடைசியாக மோதிய 4 போட்டிகளில் 3-ல் வெற்றி கண்டுள்ளது.

SCROLL FOR NEXT