மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அந்த 3 பந்துகளையும் வீணடித்த சகவீரர் பியூஷ் சாவ்லாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார் கொல்கத்தா ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன்.
மும்பையில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்தது. கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் அதை சாவ்லா எளிதாக அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த 3 பந்துளையும் சாவ்லா வீணடித்தது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
போட்டி முடிந்த பிறகு சாவ்லா வுக்கு ஆதரவளிக்கும் வகையில் பேசிய அல்ஹசன் மேலும் கூறியதாவது: போலார்ட் சிறப்பாக பந்துவீசினார். நாங்கள் ஷாட்களை தேர்வு செய்யும் விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். எப்போதுமே கடைசி ஓவரில் 12 ரன்கள் என்பது பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியைத்தான் ஏற்படுத்தும்.
அப்போது சரியான ஷாட்டை தேர்வு செய்யாவிட்டால் அது சிக்கலை ஏற்படுத்திவிடும். சில நேரம் நமக்கு சாதகமானதாக இருக்கும். சில நேரம் எதிராளிகளுக்கு சாதகமானதாக இருக்கும். நாம் அனைவருமே மனிதர்கள்தான். அதனால் தவறிழைப்பது இயல்பானதுதான்.
மும்பை அணியினர் கடைசி 5 ஓவர்களில் 70 ரன்கள் குவித்துவிட்டனர். எனினும் டி20 போட்டியில் இதுபோன்று ரன் குவிப்பது நடக்கத்தான் செய்யும். நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. நாங்கள் எங்கள் வாய்ப்பை தவறவிட்டது ஏமாற்றமளிக்கிறது. டி20 போட்டியில் ஒரு ஓவரோ அல்லது இரண்டு ஓவர்களோ போட்டியின் முடிவை மாற்றிவிடும். அதுதான் இன்றைய ஆட்டத்தில் நடந்தது என்றார்.