இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வரும் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
செரீனா இப்போட்டியின் நடப்பு சாம்பியன் ஆவார். மரியா ஷரபோவா 2011, 2012-ம் ஆண்டுகளில் ரோம் மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். செரீனா தனது இரண்டாவது சுற்றில் ஆண்ட்ரியா பெட்கோவிக்கை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார்.
உலகின் முதல்நிலை வீராங்கனையான செரீனா முன்னதாக கடந்த வாரத்தில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இப்போது ஓய்வுக்குப் பின் மீண்டும் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார்.
மரியா ஷரபோவா தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் தகுதிச் சுற்று வீராங்கனையான மோனிகா புக்கியை 6-3,7-5 என்ற செட் கணக்கில் வென்றார். களிமண் தரையில் நடைபெறும் போட்டியில் ஷரபோவா பெற்றுள்ள 12-வது தொடர் வெற்றி இதுவாகும். சமீபத்தில் ஸ்டட்கார்ட் மற்றும் மாட்ரிட் ஓபன் போட்டிகளில் ஷரபோவா சாம்பியன் பட்டம் வென்றார். காலிறுதியில் அனா இவானோவிக்கை ஷரபோவா எதிர்கொள்கிறார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் இவானோவிக்கை வென்றுதான் ஷரபோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
மற்றொரு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அக்னிஸ்கா ரத்வென்ஸ்கா வெற்றி பெற்றார்.