பேட்டிங்கில் ‘தவிர்க்க முடியாத தோல்வி’ தனக்கு மனோபலம் பெற பெரிதும் உதவியதாக இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவன் கூறியுள்ளார்.
ஸ்மைல் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிகர் தவன் பிறகு செய்தியாளர்களிடம் கூறும் போது, “நான் இப்போது ஒரு வெற்றியடைந்த கிரிக்கெட் வீரனாகத் தெரிகிறேன், ஆனால் உண்மை என்னவெனில் நான் வெற்றியாளன் என்பதை விட தோல்விகளை அதிகம் சந்தித்தவன் என்றே கருதுகிறேன்.
அனைவரும் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும், இதற்கு நானும் விதிவிலக்கல்ல, 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளேன், ஆனால் 8 சதங்களை மட்டுமெ எடுத்துள்ளேன். பெரும்பாலான வீரர்கள் தங்கள் ஃபார்ம் பற்றி அதிகம் கவலைப்படுவார்கள், ஆனால் என்னைப் பொறுத்தவரை தடைகள் இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்தலும், பொறுமையும் முக்கியம்.
தடைகளை மீறி தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கும் ஆற்றல் மிக அவசியமானது. இதுதான் தோல்விகளிலும் என்னை தொடர்ந்து போராட வைத்து வருகிறது.
ஒவ்வொரு தொடராக தயார் செய்து கொள்வதுதான் வழக்கம். ஆனால் நன்றாகத் தயார் செய்து கொள்வது அவசியம் என்று கருதுகிறேன். ஆண்டு முழுதும் விளையாடிக் கொண்டேயிருப்பதால் உடற்தகுதியும் முக்கியமானது. இது எளிதானது அல்ல, உடற்தகுதிக்காக செயல்பட்டு அதனை பேணிகாப்பது அவ்வளவு சுலபமல்ல.
தனக்கு ஊக்கம் தந்த வீரர்கள் பற்றி...
"யுவராஜ் சிங் ஒரு ஷாட்டை அடித்தால் அது மிகவும் அருமையாக இருக்கும். அவர் மூலம் நான் உத்வேகம் பெற்றுள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மெனாக வெற்றியடைய வேண்டுமெனில் அவரைப்போல் ஆடவேண்டும். சீராக ரன்கள் எடுப்பதில் புஜாராவிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். பவுலர்கள் அவரை வீழ்த்துவதற்குள் களைப்படைந்து விடுவர், தனது விக்கெட்டை எளிதில் தூக்கி எறியாதவர் அவர்.
எனவே சக வீரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது” என்றார் ஷிகர் தவன்.