சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த தொடரில் சென்னை மைதானத்தில் முதல் தோல்வியைப் பெற்றது.
டாஸ் வென்ற எம்.எஸ்.தோனி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். தோனி அதிகபட்சமாக 32 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்து 39 ரன்களை எடுக்க, கடைசியில் பவன் நெகி 17 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 ரன்கள் விளாச சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.
இலக்கைத் துரத்திய மும்பை இண்டியன்ஸ் நல்ல தொடக்கம் கண்டாலும், நடுவில் சுணக்கம் கண்டு கடைசி 4 ஓவர்களில் 51 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்று தடுமாறியது. ஆனால், கடைசியில் பிராவோவின் ஓவரை சரியாகத் திட்டமிடாததாலும், நெஹ்ரா நேற்று சொதப்பியதாலும் தோனி பவன் நெகியிடம் 19-வது ஓவரை கொடுக்க, மும்பை இண்டியன்ஸின் பாண்டியா என்ற வீரர் ‘பலே’ பாண்டியாவாகி 19-வது ஓவரில் 3 சிச்கர்களையும், ராயுடு 1 சிக்சரையும் விளாச, 25 ரன்கள் வந்தது. இது மும்பை இண்டியன்ஸுக்கு தொடர்ச்சியாக 5-வது வெற்றியைப் பெற்றுத்தந்தது.
அஸ்வின் மிகச்சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சென்னை அணியை ஆட்டத்துக்குள் இழுத்து வந்தார். அவர் வீசிய 11-வது ஓவரில்தான் மும்பை தொடக்க வீரர்களான பார்த்தீவ் படேல் (45), சிம்மன்ஸ் (38) ஆகிய இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதிரடி மன்னன் பொலார்ட் 1 ரன்னில் பிராவோவிடம் ரன் அவுட் ஆனார். 12வது ஓவரில் 86/3 என்று மும்பை தடுமாறத் தொடங்கியது. அதன் பிறகு ரோஹித் சர்மா (18), ராயுடு இணைந்து ஸ்கோரை 31 பந்துகளில் 86/3 என்பதிலிருந்து 125 ரன்களுக்கு உயர்த்தினர். ரோஹித் சர்மாவை, பிராவோ வீழ்த்தினார்.
17.1 ஓவர்களில் 125/4 என்று 17 பந்துகளில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆட்டத்தின் 17-வது ஓவரை நெஹ்ரா வீச அம்பாத்தி ராயுடு காலை பரத்திக் கொண்டு லாங் ஆனில் ஒரு சிக்ஸையும் பிறகு அதே ஓவரில் புல்டாஸை லாங் ஆனில் மீண்டும் ஒரு சிக்சரையும் அடித்தார்.
அதன் பிறகே பவன் நெகியை வில்லனாக்கிய அந்த 19-வது ஓவர் வந்தது. நெகி அதுவரை 3 ஓவர்களில் 10 ரன்களையே விட்டுக் கொடுத்திருந்தார். அதனால் அவரை அந்த ஓவரில் தோனி ஏன் கொண்டு வர வேண்டும் என்ற கேள்வியை கேட்க முடியாது. ஆனால், பிராவோ ஓவர்களை தோனி கொஞ்சம் மேனேஜ் செய்திருந்தால் இதனைத் தவிர்த்திருக்க முடியும், மேலும் நெஹ்ரா 3 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்திருந்தாலும், அவர் அந்த ஓவரை வீசியிருந்தால் 25 ரன்களையெல்லாம் அடித்திருக்க முடியாது என்று கூறலாம்.
ஆனால், தோனி ஒரு சின்ன விளையாட்டை முயன்று பார்த்தார். ஆனால் பாண்டியா வேறு மாதிரியாக யோசனை செய்தார். லாங் ஆன், லாங் ஆஃபில் 2 சிக்சர்கள். மேலும் ஒரு ஃபுல் லெந்த் பந்தும், சிறிய சென்னை மைதானத்தின் லாங் ஆன் பவுண்டரியில் ரசிகரக்ளிடையே போய் விழுந்தது. பிறகு பாண்டியா ஒரு ‘பை’ ரன் ஓடி ஸ்ட்ரைக்கை ராயுடுவுவிடம் கொடுக்க அவரும் நேராக ஒரு சிக்சர் விளாச, மொத்தம் 25 ரன்கள்! பவன் நெகி பேட்டிங்கில் 17 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். ஆனால் பவுலிங்கில் ஒரே ஓவரில் 25 ரன்களை விட்டுக் கொடுத்தது துரதிர்ஷ்டவசமானது.
கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா, பாண்டியாவுக்கு ஒரு எளிதான கேட்சை வேறு விட்டார்.
ராயுடு 19 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 34 ரன்களுடனும், பாண்டியா 8 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 21 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர். பாண்டியா இந்த ஒரு ஓவருக்காகவே ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
பாண்டியாவை சாதாரணமாக எடைபோட்டிருக்க கூடாது. காரணம் அவர் விளையாடிய 23 டி20 போட்டிகளில் 433 ரன்களை 116.71 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் எடுத்துள்ளார். அதைவிட முக்கியமானது இந்த 433 ரன்களில் பாதி ரன்களை சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளிலேயே அடித்துள்ளார். பரோடாவைச் சேர்ந்த இந்த 21 வயது இளம் அதிரடி வீரர் பாண்டியா 26 பவுண்டரிகளையும், 21 சிக்சர்களையும் டி20-யில் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை நாட்டின் கேப்டனான அனுபவமிக்க தோனி அறிந்திருப்பது அவசியம். மேலும் முதல் தர கிரிக்கெட்டில் 6 போட்டிகளில் 285 ரன்களை எடுத்துள்ள பாண்டியா, அதில் 41 பவுண்டரிகளையும் 3 சிக்சர்களையும் அடித்துள்ளார். அதாவது 285 ரன்களில் 182 ரன்கள் பவுண்டரி சிக்சர்களிலேயே வந்துள்ளது.
ஆகையால், பவன் நெகியை வைத்து அவரை வீழ்த்திவிடலாம் என்று தோனி கருதியது பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனால், தோனி வேகப்பந்து வீச்சாளரை அந்த ஓவரில் கொண்டு வராததற்கு காரணம் இருந்தது. அதுவரை, வேகப்பந்து வீச்சாளர்கள் 5 ஓவர்களில் 64 ரன்களை கொடுத்திருந்தனர். ஸ்பின்னர்கள் 11 ஓவர்களில் 2 விக்கெட்டுகளுடன் 54 ரன்களையே விட்டுக் கொடுத்திருந்தனர். அதனால் தோனியின் முடிவு தர்க்க ரீதியாக சரியானதே. ஆனால், அவர் வேறு மாதிரியாக சாதுரியத்துடனும் கற்பனை வளத்துடனும் செயல்பட்டிருக்க வேண்டும்.
நெஹ்ராவையோ, அல்லது மோஹித் சர்மாவையோ கொண்டு வந்து பார்த்திருக்கலாம். நிச்சயம் 25 ரன்கள் கொடுத்திருக்கப் படமாட்டாது என்பதே சென்னை ரசிகர்களின் கருத்தாக நேற்று அமைந்தது.
பேட்டிங்கிலும் தோனி 32 பந்துகளைச் சந்தித்து பல ஷாட் முயற்சிகள் அவர் மட்டையில் சிக்கவில்லை. மொத்தம் 9 பந்துகளில் அவர் ரன் எதையும் எடுக்கவில்லை. இந்த 9 பந்துகளில் 10 அல்லது 12 ரன்களை எடுத்திருந்தால் கூட மும்பை அணி தோல்வியடைந்திருக்க வாய்ப்பிருந்தது.