விளையாட்டு

தமிம் இக்பால் இரட்டை சதம்: பாகிஸ்தான்-வங்கதேசம் முதல் டெஸ்ட் டிரா

பிடிஐ

பாகிஸ்தான்-வங்கதேசம் அணி களுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.

முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம், தமிம் இக்பால் (206 ரன்கள்), இம்ருள் கெய்ஸ் (150 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டதோடு, போட்டியையும் டிரா செய்தது.

வங்கதேசத்தின் குல்னா நகரில் நடந்த இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 120 ஓவர்களில் 332 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 168.4 ஓவர்களில் 628 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 224 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 296 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 61 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 273 ரன்கள் குவித்திருந்தது. கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் தமிம் இக்பால் 202 பந்துகளிலும், இம்ருள் கெய்ஸ் 231 பந்துகளிலும் 150 ரன்களைக் கடந்தனர். அந்த அணி 312 ரன்களை எட்டியபோது இம்ருள் கெய்ஸின் விக்கெட்டை இழந்தது.

அவர் 240 பந்துகளில் 3 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 150 ரன்கள் எடுத்தார். தமிம்-கெய்ஸ் ஜோடி 312 ரன்கள் குவித்ததன் மூலம் ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த வங்கதேச ஜோடி, 300 ரன்களுக்கு மேல் குவித்த வங்கதேச ஜோடி என்ற பெருமைகளைப் பெற்றது.

இதன்பிறகு வந்த மோமினுல் ஹக் 21 ரன்களில் வெளியேற, மஹமதுல்லா களமிறங்கினார். மறுமுனையில் வேகம் காட்டிய தமிம் இக்பால், யாசிர் ஷா வீசிய 93-வது ஓவரில் இரு சிக்ஸர்களையும், ஜுனைத் கான் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரையும் விளாசி, 264 பந்துகளில் இரட்டை சதமடித்தார். அவர் 278 பந்துகளில் 7 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 206 ரன்கள் குவித்து வெளி யேறினார்.

இதன்பிறகு மஹமதுல்லா 40 ரன்களிலும், கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் ரன் ஏதுமின்றியும், சவும்ய சர்க்கார் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தேநீர் இடைவேளைக்குப் பிறகு போட்டியை டிராவில் முடித்துக் கொள்ள இரு அணிகளும் முடிவு செய்தன. அப்போது வங்கதேசம் 136 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் குவித்திருந்தது. அல்ஹசன் 76, ஷுவகதா ஹோம் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிம் இக்பால் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டித் துளிகள்…

இதற்கு முன்னர் பாகிஸ்தானுடன் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த வங்கதேசம் அவையனைத்திலும் தோல்வி கண்டிருந்தது. இப்போது முதல்முறையாக டிரா செய்திருப்பதன் மூலம் அந்த அணி புதிய உத்வேகத்தை பெற்றிருக்கிறது.

இந்தப் போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 1,515 ரன்கள் குவித்தன. 26 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த 2-வது வங்கதேச வீரர், ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவித்த வங்கதேச வீரர் என்ற பெருமைகளைப் பெற்றுள்ளார் தமிம் இக்பால். முன்னதாக 2013-ல் காலேவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முஷ்பிகுர் ரஹிம் 200 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

SCROLL FOR NEXT