விளையாட்டு

அர்ஜுனா விருதுக்கு ஜிது ராய், சர்னோ பட் பெயர் பரிந்துரை

பிடிஐ

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் ஜிது ராய், பி.என்.பிரகாஷ், வீராங்கனை ராஹி சர்னோபட் ஆகியோரின் பெயரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது இந்திய துப்பாக்கி சுடுதல் சங்கம்.

28 வயதான ஜிது ராய் கடந்த ஜூன் முதல் தற்போது வரை 7 சர்வதேச போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தென் கொரியாவில் கடந்த மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் வென்ற வெண்கலப் பதக்கமும் அதில் அடங்கும்.

கோர்க்கா படைப் பிரிவின் 11-வது பட்டாலியனை சேர்ந்த ஜிது ராய், கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஸ்பெயினில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார்.

ராஹி சர்னோபட், காமன் வெல்த் போட்டியில் தங்கப் பதக்கமும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். 24 வயதான சர்னோபட் 2013 உலகக் கோப்பையில் தங்கம் வென்றுள்ளார். அதன்மூலம் உலகக் கோப்பை பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

பெங்களூரைச் சேர்ந்தவரான பி.என்.பிரகாஷ் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதோடு, கடந்த டிசம்பரில் நடைபெற்ற 58-வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாம்பியன்களின் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர 2013 உலகக் கோப்பை போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.

SCROLL FOR NEXT