விளையாட்டு

வில்லியம்சன் சதத்துடன் 523 ரன்கள் குவித்த நியூஸிலாந்து: இங்கிலாந்துக்கு சிக்கல்

செய்திப்பிரிவு

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான நேற்று இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 389 ரன்களுக்கு எதிராக நியூஸிலாந்து அணி தன் முதல் இன்னிங்சில் 523 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

134 ரன்கள் முன்னிலை பெற்ற நியூஸிலாந்து, இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் லித், கேரி பாலன்ஸ் விக்கெட்டுகளைக் கைப்பற்ற இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது. நியூஸிலாந்து ரன் எண்ணிக்கையின் இடைவெளியைக் குறைக்க இன்னும் 60 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் கேப்டன் குக் 32 ரன்களுடனும், இயன் பெல் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நேற்று காலை 303/2 என்று தொடங்கிய நியூஸிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் 132 ரன்களை எடுத்தார். இது ஒரு அற்புதமான டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும். அதாவது சதம் எடுக்கும் வரை அபாரமான ஆட்டம். அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் வழங்கினார். டெய்லர் 62 ரன்களையும் கேப்டன் மெக்கல்லம் அதிரடி 42 ரன்களையும் எடுக்க வாட்லிங் 61 ரன்களை எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் பிராட், மார்க் உட் மொயீன் அலி ஆகியோர் தலா, 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

கேன் வில்லியம்சன் தனது 10-வது டெஸ்ட் சதத்தை எடுத்து முடித்தார். 403/3 என்ற நிலையில் இங்கிலாந்து நிலை பரிதாபமாக இருந்தது. ஆனால் அதன் பிறகு மொயீன் அலி மற்றும் மார்க் உட் ஆகியோர் பந்து வீச்சினால் கடைசி 7 விக்கெட்டுகளை 120 ரன்களில் வீழ்த்தியது இங்கிலாந்து.

நியூஸிலாந்து அணியில் டாப் 4 பேட்ஸ்மென்கள் அரைசதம் கடந்திருப்பது இது 2-வது முறையே.

இங்கிலாந்தின் சொதப்பல்கள்:

கேன் வில்லியம்சன் 106 ரன்களில் இருந்த போது முதல் ஸ்லிப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வாய்ப்பு வந்தது ஆனால் பிடிக்கவில்லை. 108 ரன்களில் எளிதான ரன் அவுட் வாய்ப்பு நழுவ விடப்பட்டது.

112 ரன்களில் வலுவான எல்.பி. முறையீட்டு டிவி நடுவர் பரிசீலனைக்குச் செல்ல நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கபப்பட்டது. ஒரு அப்பீல் விரயம் செய்யப்பட்டது, காரணம் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்து ஆகும்.

120 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் இயன் பெல் வில்லியம்சனுக்கு மீண்டும் ஒரு கேட்சை விட்டார். ஸ்டோக்ஸ் தலையில் கையை வைத்துக் கொண்டார். 122 ரன்களில் மீண்டும் மார்க் உட் பந்தில் எட்ஜ் எடுக்க முதல் ஸ்லிப்பிற்கு சற்று முன்னால் விழுந்தது பந்து, இது ஸ்லிப் பீல்டரின் தவறான கணிப்பே.

இன்று 4-ம் நாள் ஆட்டத்தில் குறைந்தது 250 ரன்களையாவது முன்னிலையாக இங்கிலாந்து பெறுவது அவசியம். அப்படி எடுத்தால் நியூஸிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

நியூஸிலாந்து இன்று குக், பெல் ஆகியோரை விரைவில் வீழ்த்தி, இங்கிலாந்தின் வலுவான டெய்ல் எண்டர்களையும் விரைவில் முடக்க வேண்டும். 200 ரன்கள் வரை 4-வது இன்னிங்சில் இலக்கைத் துரத்துவது எளிது.

ஆனால், நியூஸிலாந்து ஆக்ரோஷமாக விளையாடுவதைப் பார்த்தால் வெற்றி நியூஸிலாந்துக்கு சாதகமாக அமைவது போல் தோன்றுகிறது.

SCROLL FOR NEXT