விளையாட்டு

சூப்பர் கிங்ஸை வீழ்த்தியதன் மூலம் முக்கியமான பரீட்சையில் வென்றிருக்கிறோம்: கம்பீர் பெருமிதம்

பிடிஐ

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. உத்தப்பா 58 பந்துகளில் 80 ரன்களும், ஆன்ட்ரே ரஸல் 32 பந்துகளில் 55 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் சென்னையில் நடைபெற்ற முந்தைய ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸிடம் கண்ட தோல்விக்குப் பதிலடி கொடுத்தது கொல்கத்தா.

வெற்றி குறித்து கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் கூறியதாவது: முந்தைய இரு போட்டிகளில் வெற்றி பெறாததால் இந்தப் போட்டி எங்களுக்கு முக்கியமான பரீட்சையாக அமைந்தது. எங்களின் மனப்போக்கையும், இயல்பையும் சோதனை செய்யும் வகையில் இந்தப் போட்டி இருந்தது. நடப்பு சாம்பியனைப் போன்று நாம் விளையாட விரும்பினால் இந்தப் போட்டி நமக்கு முக்கியமான பரீட்சையாக இருக்கும். இதில் எவ்வித நெருக்கடியுமின்றி விளையாட வேண்டும் என அணியினரிடம் கூறியிருந்தேன். உத்தப்பாவும், ரஸலும் நான் கூறியதைப் போன்று விளையாடிவிட்டனர்.

நேர்மறையான எண்ணத்துடன் போட்டியை அணுகுவதோடு, விக்கெட்டுகளை வீழ்த்தவும், சிறப்பாக ஆடி இலக்கை எட்டவும் விரும்பினோம். ஒரு கட்டத்தில் சூப்பர் கிங்ஸை 140 முதல் 150 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் டி20 போட்டியில் அது எல்லா நேரங்களிலும் நடப்பதில்லை. சூப்பர் கிங்ஸுக்கு எதிராக அதிரடியாக ஆடினால் இலக்கை எட்ட முடியும் என்பது எனக்கு தெரியும். ஒட்டுமொத்த பாராட்டும் உத்தப்பா மற்றும் ரஸலுக்கே உரியது என்றார்.

SCROLL FOR NEXT